Published : 24 Oct 2025 05:30 AM
Last Updated : 24 Oct 2025 05:30 AM
நாமக்கல்: சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி (74) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு மனைவி ஜெயமணி, மகன் மாதேஸ், மகள் பூமலர் ஆகியோர் உள்ளனர்.
கொல்லிமலை இலக்கிராய்ப்பட்டியைச் சேர்ந்த பொன்னுசாமி, 9-ம் வகுப்பு வரை படித்துள்ளார். 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் வென்ற பொன்னுசாமி, 2011, 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். மீண்டும் 2021 தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.
அவரது உடல் சேந்தமங்கலம் நடுக்கோம்பை ஊராட்சி புளியங்காடு கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முத்துசாமி, சிவசங்கர், மதிவேந்தன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இன்று (அக். 24) கொல்லிமலையில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் பொன்னுசாமியின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
ஆளுநர், முதல்வர் இரங்கல்: சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: சட்டப்பேரவை உறுப்பினர் பொன்னுசாமியின் மறைவு மிகுந்த வருத்தம் அ ளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: கு.பொன்னுசாமி மறைந்த துயரச் செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். அவரது பிரிவால் வாடும் சேந்தமங்கலம் தொகுதி மக்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், திமுக தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், முன்னாள் எம்.பி. சு.திருநாவுக்கரசர், கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT