Published : 24 Oct 2025 01:18 AM
Last Updated : 24 Oct 2025 01:18 AM
சென்னை: விவசாயிகளை சந்தித்து முழுஅளவில் பயிர்க்காப்பீடு செய்ய ஆலோசனை வழங்க வேண்டும் என வேளாண் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வேளாண்துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து, அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். அப்போது, மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கணக்கெடுக்கப்படும் பயிர் பாதிப்பு, விதை, உரம் மற்றும் பயிர்பாதுகாப்பு மருந்துகள் இருப்பு, சம்பா நெற்பயிருக்கான பயிர்க்காப்பீடு குறித்து மாவட்ட வேளாண்மை இணைஇயக்குநர்கள், தோட்டக்கலை துணை இயக்குநர்கள் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
விழிப்புணர்வுடன் பணி... ஆய்வுக்கூட்டத்தின் முடிவில், அனைத்து அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மிகுந்த விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும். விவசாயிகளை சந்தித்து முழுஅளவில் பயிர்க்காப்பீடு செய்யவும், பயிர் வாரியான வெள்ள பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்தும் ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
மேலும், அந்தந்த பகுதியில் உள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்தி துறையால் எடுக்கப்பட்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துரைக்க வேண்டும். துறை அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைப்புடனும், முனைப்புடனும் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத் தினார்.
கூட்டத்தில், வேளாண்துறை செயலர் தட்சிணாமூர்த்தி, வேளாண் வணிக ஆணையர் ஆபிரகாம், வேளாண் இயக்குநர் முருகேஷ், சர்க்கரைத்துறை இயக்குநர் அன்பழகன், தோட்டக்கலைத்துறை இயக்குநர் குமரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT