Published : 24 Oct 2025 12:56 AM
Last Updated : 24 Oct 2025 12:56 AM

கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டக் கூடாது என அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்: ஐகோர்ட்

சென்னை: கோயில் நிதியில் இருந்து வணிக வளாகம் கட்டக்கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில், கோயில் நிதியில் இருந்து வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டதடை விதிக்கக் கோரி, வில்லிவாக்கத்தை சேர்ந்த ஏ.பி.பழனி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன், ‘‘கோயில் நிதியைப் பயன்படுத்தி, வணிக வளாகங்கள் கட்டக் கூடாது என உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அதை மீறி பல கோயில் இடங்களில் வணிக வளாகங்கள் கட்டப்படுகின்றன’’ என்றார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் அறநிலையத் துறை சிறப்பு அரசு வழக்கறிஞர் என்ஆர்ஆர். அருண் நடராஜன் ஆகியோர், ‘‘கந்தகோட்டம் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரூ.7 கோடியில் கட்டப்படும் இந்த கட்டிடம் மூலமாக கோயிலுக்கு மாதம் ரூ.7 லட்சம் வருமானம் கிடைக்கும். இவ்வாறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, அறநிலையத் துறை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றனர்.

இதையடுத்து நீதிபதிகள், கந்தகோட்டம் முத்துக்குமாரசுவாமி கோயில் நிலத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். அதேநேரம், அந்த கட்டுமானப் பணிகள் அறநிலையத் துறை சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு, பக்தர்களின் வசதிகளுக்காக மட்டுமே பயன்படுவதாக இருக்கவேண்டும். அவற்றை வணிக ரீதியில் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தி, இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் அறநிலையத் துறை பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.22-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும், ‘‘கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டக் கூடாது எனதமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத் துறை ஆணையர் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்’’ என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x