Published : 24 Oct 2025 12:47 AM 
 Last Updated : 24 Oct 2025 12:47 AM
சென்னை: நெல் கொள்முதலுக்கான அதிகபட்ச ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்ததை அடுத்து, இதுகுறித்து ஆய்வு செய்ய 3 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவினர் உடனடியாக தமிழகம் சென்று ஆய்வுப் பணிகளை தொடங்க வேண்டும் என்று மத்திய உணவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்.16-ம் தேதி வடகிழக்கு பருமழை தொடங்கியுள்ள நிலையில், டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் சம்பா, தாளடி, பிசானப்பருவ நெல் சாகுபடிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 21 லட்சம் ஹெக்டேரில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
9.67 லட்சம் டன் கொள்முதல்: இதில் 5 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிரில் அரசு கணக்கீடுகளின்படி 3.60 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நெல் அறுவடைப் பணிகள் அக்டோபர் இறுதிக்குள் முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளைவிட அதிக அளவாக நடப்பு ஆண்டில் இதுவரை 1,819 கொள்முதல் நிலையங்கள் மூலம் 9.67 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், அறுவடை செய்த நெல்லை விற்பதற்காக, கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்து குவித்துள்ளனர். லாரிகள் போதிய அளவு இல்லாததால், நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. அவ்வப்போது மழையும் பெய்து வருவதால், மழைநீரில் நெல் மூட்டைகள் நனைந்து, நெல் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களையும் மழைநீர் சூழ்ந்
துள்ளதால், விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, நெல் கொள்முதலில் தாமதம் நிலவுவதால், மழைநீரில் நெல் மூட்டைகள் நனைந்து பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் விளக்கங்களை அளித்து வருகின்றனர்.
தமிழக அரசு கடிதம்: இதற்கிடையே, ‘பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் அறுவடைக்கு முன்னரே தண்ணீரில் மூழ்கியுள்ளன. அறுவடை செய்தநெல்லும் அதிக அளவு ஈரப்பதத்துடன் உள்ளது. எனவே, நெல் கொள்முதலுக்கான அதிகபட்ச ஈரப்பத அளவை தற்போது உள்ள 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி, கொள்முதல் விதிகளில் தளர்வு அளிக்க வேண்டும்’ என்று கோரி, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்துக்கு 3 குழுக்களை மத்திய உணவுத் துறை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மைய துணை இயக்குநர் மற்றும் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள இந்திய தானிய இருப்பு மேலாண்மை மற்றும் ஆய்வு நிறுவன துணை இயக்குநர் ஆகியோருக்கு மத்திய உணவு, பொது விநியோகத் திட்ட அமைச்சகம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: நெற்பயிர் கொள்முதல் விதிகள் தொடர்பாக தளர்வு கோரிதமிழக உணவுத் துறை செயலரிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. இதுகுறித்த தற்போதைய நிலையை அறிய, இந்திய உணவுக்கழகம் மற்றும் தமிழக அதிகாரிகளுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரிக்க வேண்டும். இதற்காக, உணவுத் துறையின் இருப்பு மற்றும் ஆராய்ச்சி மைய துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்தலைமையில் தலா 2 தொழில்நுட்ப அலுவலர்களுடன் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவினர் உடனடியாக தமிழகம் சென்று பணிகளை தொடங்க வேண்டும். தமிழக அரசு மற்றும் இந்திய உணவுக் கழக சென்னை மண்டல அலுவலகத்துடன் இணைந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நெல் மாதிரிகளை சேகரிக்க வேண்டும். பிறகு, இந்திய உணவுக் கழகத்தின் மண்டல, மாவட்ட அலுவலக பரிசோதனைக் கூடங்களில் அவற்றை ஆய்வு செய்ய வேண்டும். 3 குழுக்களும் இணைந்து ஆய்வு முடிவு களை அறிக்கையாக தயாரித்து,மத்திய உணவுத் துறைக்கு அனுப்ப வேண்டும். அதன்பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT