Published : 23 Oct 2025 02:40 PM
Last Updated : 23 Oct 2025 02:40 PM

ஆவின் பால் விநியோக வாகன டெண்டர் விண்ணப்பத்தில் விதிமீறினால் நடவடிக்கை: ஐகோர்ட்டில் அரசு உறுதி

கோப்புப் படம்

சென்னை: ஆவின் பால் பாக்கெட் விநியோகத்துக்கு பிரத்யேக வாகனங்களுக்கான டெண்டரில், நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத வாகனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.

சென்னை அம்பத்தூர், மாதவரம் மற்றும் சோளிங்கநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள பால் பண்ணைகளில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு ஆவின் பால் பாக்கெட் விநியோகம் செய்வதற்காக 143 பிரத்யேக வாகனங்களுக்கு ஆவின் நிறுவனம் டெண்டர் கோரியிருந்தது.

டெண்டரில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்றாத, தகுதியற்ற வாகனங்களையும் டெண்டரில் பங்கேற்க அனுமதித்துள்ளதாகவும், டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறி, திருவள்ளூர் மாவட்ட சரக்கு போக்குவரத்து சேவை கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் ஞானசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்த போது, டெண்டர் இறுதி செய்வதற்கு முன்பே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வாகனங்களை முறையாக ஆய்வு செய்து சரி பார்த்து, டெண்டர் விதிகளை பூர்த்தி செய்யாத வாகனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் உறுதி தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அரசு தலைமை வழக்கறிஞரின் உத்தரவாதத்தை பின்பற்றி டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x