Last Updated : 23 Oct, 2025 08:22 AM

3  

Published : 23 Oct 2025 08:22 AM
Last Updated : 23 Oct 2025 08:22 AM

“ஆளும் கட்சியினருக்கும் குறைகள் இருக்கின்றன!” - திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம் ஒப்புதல்

திமுக நிகழ்ச்சிகள், முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என அனைத்திலும் முன்நிற்பவர் திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம். அவரிடம், நடப்பு அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.

2026 தேர்தலில் வணிகர்களின் வாக்கு யாருக்குச்சாதகமாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

வணிகர்கள் வாக்குகள் 90 சதவீதம் திமுக கூட்டணிக்குத்தான் கிடைக்கும். மத்திய அரசுதான் வரிகளை போட்டு பிழிகிறது. மாநில அரசு வரிச்சுமையை கூட்டாததால் வியாபாரிகள் மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்கின்றனர். அதிகார தோரணையில் யாரும் கடைகளில் நன்கொடை வாங்குவதும், கடைகளைக் காலிசெய்யச் சொல்வதும் கிடையாது.

பிரியாணிக் கடைகளில் திமுகவினர் மாமூல் கேட்பது, இலவச பிரியாணி கேட்டு தகராறு செய்வது போன்ற சம்பவங்களும் நடக்கத்தானே செய்கின்றன?

திமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு சதவீதம் கூட இந்த பிரச்சினை வரவி்ல்லை. எதிர்க்கட்சியாக இருந்த போது நிகழ்ந்த சம்பவத்தில், எங்கள் தலைவரே நேரடியாக தலையிட்டு சம்பந்தப்பட்டவரை கட்சியில் இருந்து நீக்கினார்.

ஆட்சியில் பங்கு என்ற தவெகவின் அறிவிப்பு திமுக கூட்டணியை குறிவைத்து ஏவப்படும் அஸ்திரம்தானே?

கிறிஸ்தவர்கள் வாக்குகளை பிரிக்க பாஜக பெற்ற பிள்ளைதான் தவெக. இதை கரூர் சம்பவமே காட்டிக் கொடுத்துவிட்டது. கரூர் சம்பவத்தில் பாஜகவும் அதிமுகவும் விஜய் கட்சிக்கு வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்குகின்றன. ஆனால் விஜய் பாஜகவுடன் சேர்ந்தால் தோற்பார் என்பது ஊரறிந்த விஷயம். திமுக வாக்குகளை பிரிப்பதே பாஜகவின் தந்திரம்.

பாஜக சொன்னதால், விஜய் கட்சியில் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, விஜய் ரசிகர்களுக்கு காசு கொடுத்து கூட்டங்களுக்கு வரவைக்கிறார். அதனால், அவர்கள் வெறித்தனமாக இருக்கின்றனர். இந்த நிலையில், வராத ஆட்சிக்கு அதிகாரத்தில் பங்கு தருவோம் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்?

மக்களுக்கான திட்டங்களை தந்திருப்பதாகச் சொல்லும் திமுக, தனித்து நிற்க தயங்குவது ஏன்?

தேர்தல் களத்தில் தோழமை தேவை இல்லை என்று சொல்வது நன்றி கெட்ட தனம். ஜெயலலிதா காங்கிரஸையும் தேமுதிகவையும் கழற்றிவிட்டது போல் நாங்கள் இல்லை. மகத்தான வெற்றிக்கு தேர்தலில் கூட்டணி தேவை என்றுதான் எங்கள் தலைவர் கூறி வருகிறார். அதனால், கூட்டணிக்குத்தான் அவர் முக்கியத்துவம் தருவார்.

காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சியினர், தாங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்று பேரவையிலேயே பேசுகின்றனரே?

கூட்டணி கட்சியினர் மட்டுமல்ல... ஆளுங்கட்சியினரும் குறைகளை சுட்டிக்காட்டத்தான் செய்கின்றனர். யாருக்குத்தான் குறைகள் இல்லை. முதல்வர் மட்டும் நிம்மதியாக இருக்கிறாரா? அவருக்கு இருக்கும் குறைகளை அவர் யாரிடம் சொல்ல முடியும்? அப்படித்தான் கூட்டணி கட்சியினர் தங்களுக்கு இருக்கும் வருத்தங்களைப் பேசுகிறார்கள்.

நீங்கள் ஏன் இதுவரை எம்எல்ஏ ஆக முடியவில்லை?

கடந்த 2016 தேர்தலில் மதுரவாயல் தொகுதியை எனக்குத் தருவதாக தலைவர் கூறினார். ஆனால், கடைசி நேரத்தில் அந்தக் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. 2021-ல் விருகம்பாக்கம் தொகுதி கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் அப்போது, இளைஞர் ஒருவருக்கு தரவேண்டும் என்பதால் பிரபாகர் ராஜாவுக்கு சென்றுவிட்டது. 2026 தேர்தலில் வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x