Published : 23 Oct 2025 08:39 AM
Last Updated : 23 Oct 2025 08:39 AM

விளவங்கோட்டில் மீண்டும் விஜயதரணி? - ஆலோசிக்கும் பாஜக... ஆர்ப்பரிக்கும் காங்கிரஸ்!

விஜயதரணி, தாரகை கத்பர்ட்

விளவங்கோடு தொகுதியில் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றிபெற்ற விஜயதரணி, காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவர் பதவியை எதிர்பார்த்தார். அது கிடைக்கவில்லை என்றதும், சீனியர் என்ற அடிப்படையிலும் பெண் பிரதிநிதி என்பதாலும் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் பதவியாவது கிடைக்கும் என எதிர்ப்பார்த்தார்.

அதுவும் ஆகாது என்று தெரிந்ததும், “காங்கிரஸில் பெண்களை அங்கீகரிப்பதில்லை” என்று புகார் வாசித்துவிட்டு 2024-ல் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து, காங்கிரஸ் பாரம்பரியத்தில் வளர்ந்த தன்னை சமரசம் செய்து கொண்டு பாஜக-வில் இணைத்துக் கொண்டார்.

விஜயதரணி பாஜகவில் இணைந்ததுமே பாஜக அவருக்கு மக்களவைத் தேர்தலில் வாய்ப்பளிக்கும் எனப் பேசப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. அடுத்ததாக, கட்சியில் தனக்கு முக்கிய பதவி கிடைக்கும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால், அண்மையில் மாநில பாஜகவுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்த போது கூட அவரைக் கணக்கில் கொள்ளவில்லை பாஜக. இதனிடையே, விஜயதரணி விஜய் கட்சியில் இணையக்கூடும் என்றும் சிலர் செய்திகளை பரப்பினார்கள்.

இந்த நிலையில், தொடர்ச்சியாக மூன்று முறை விஜயதரணி கை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற விளவங்கோடு தொகுதியிலேயே அவரை இம்முறை தாமரை சின்னத்தில் போட்டியிடவைக்க பாஜக தரப்பில் ஆலோசனை நடப்பதாகச் சொல்கிறார்கள்.

குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கென தனித்த செல்வாக்கு உள்ளது. அதற்குப் போட்டியாக பாஜகவும் இப்போது இந்த மாவட்டத்தில் வளர்ந்து கொண்டே வருகிறது. இங்குள்ள 6 தொகுதிகளில் குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 3 தொகுதிகள் இப்போது ‘கை’வசம் இருக்கிறது.

வரும் தேர்தலுக்கு குமரிமாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்குமே அனைத்து முக்கிய கட்சிகளிலுமே கடும் போட்டி நிலவுகிறது. இதில், பாஜக தரப்பில் நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு தொகுதிகளை குறிவைத்து களப்பணி செய்கின்றனர். இதில், விளவங்கோடு தொகுதியில் விஜயதரணியையே இம்முறை களமிறக்க காய் நகர்த்துகிறது பாஜக.

இதுகுறித்து விஜயதரணியிடமே பேசினோம். “விளவங்கோடு தொகுதி மக்கள் என்னை தங்கள் வீட்டுச் செல்லப்பிள்ளையாக கருதுகிறார்கள். பாஜகவுக்கு மாறினாலும், 12 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுதிக்காக நான் செய்து கொடுத்திருக்கும் வளர்ச்சிப் பணிகளால் மக்கள் மத்தியில் நற்பெயரைச் சம்பாதித்து வைத்திருக்கிறேன்.

அதனால் விளவங்கோடு மக்கள் எப்போதும் எனக்கு ஆதரவளிப்பார்கள். பாஜகவில் தேசிய பொறுப்பு மற்றும் எம்.பி. சீட் உள்ளிட்டவற்றை நான் விரும்பினாலும் எனக்கு எப்போது எதைக் கொடுக்க வேண்டும் என்பது தலைமைக்குத் தெரியும். அவர்கள் கொடுக்கும் நேரத்தில் கொடுப்பதை ஏற்றுக் கொள்வேன்.

கடந்த 2024-ல் நடந்த சட்டப்பேரவை இடைத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் என்னை போட்டியிடும்படி பாஜக தலைமை அறிவுறுத்தியது. அப்போது தான் நான் காங்கிரஸை விட்டு வந்திருந்ததால் உடனே இன்னொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட வேண்டாமே என்பதற்காக நான் மறுத்துவிட்டேன்.

இந்தத் தேர்தலில் அப்படியான நிர்பந்தம் ஏற்படுமா எனத் தெரியவில்லை. அதேசமயம் என் மீது நம்பிக்கை வைத்து கட்சி தலைமை என்னை தேர்தலில் போட்டியிடச் சொன்னாலும் அல்லது களப்பணி செய்யச் சொன்னாலும் அதற்கு கட்டுப்பட்டு செயல்படுவேன்” என்றார் அவர்.

விஜயதரணியின் விருப்பம் குறித்து தொகுதியின் தற்போதைய எம் எல்ஏ-வான காங்கிரஸ் கட்சியின் தாரகை கத்பர்ட்டிடம் கேட்டதற்கு, “விளவங்கோடு தொகுதி காங்கிரஸின் கோட்டை. இங்கு விஜயதரணி அல்ல... பிரதமர் நரேந்திர மோடியே வந்து போட்டியிட்டாலும் வெற்றிபெற முடியாது.

இங்கு வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல... அவர் எந்தக் கட்சிக்காக நிற்கிறார் என்பது தான் முக்கியம். ஏனென்றால், இங்கு கட்சிக்குத்தான் ஓட்டு. நான் இல்லாவிட்டாலும் காங்கிரஸ் சார்பில் இங்கு யார் நின்றாலும் வெற்றி அவர்களுக்குத்தான்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x