Published : 23 Oct 2025 07:58 AM
Last Updated : 23 Oct 2025 07:58 AM
கரூர் நெரிலில் 41 பேர் உயிரிழந்த பிறகு நடிகர் விஜய், தற்போது வரை ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்தல் பிரச்சாரத்தை தொடரவில்லை. ஒருபுறம் இந்த சம்பவத்துக்கு ஆளுங்கட்சியின் சதிதான் காரணம் என தவெக-வினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மற்றொருபுறம், தவெக-வுக்கு தாமாகவே சென்று அதிமுகவும், பாஜகவும் ஆதரவுக் கரம் நீட்டுகின்றன. இதற்கு ஒரு படி மேலாகச் சென்று, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுகவுடன் விஜய் கூட்டணி சேராவிட்டால் அந்த ஆண்டவனால் கூட அவரையும், அவரது கட்சியையும் காப்பாற்ற முடியாது, என சாபம் விடாத குறையாக எச்சரித்துள்ளார்.
கரூர் கற்று தந்த அரசியல் பாடத்தால் விஜய் விழித்துக்கொண்டுள்ளதாகவும், இனி ரோடு ஷோ கிடையாது, ஜெயலலிதா பாணியில் ஹெலிகாப்டரில் பிரச்சாரம் நடக்கும் இடத்துக்கு சென்னையில் இருந்து நேரடியாக வரவும், கூட்டம் முடிந்ததும் ஹெலிகாப்டரிலேயே திரும்பிச் செல்லவும், ரசிகர்கள் அன்புத் தொல்லையை தவிர்க்க சாலை மார்க்கத்தை விஜய் கைவிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தவெக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘இன்னும் சில வாரங்களில் திட்டமிட்டபடி விஜய் பிரச்சாரத்துக்கு செல்ல தயாராகிவிட்டார். இந்த தேர்தலில் எந்த 41 பேர் உயிரிழப்பை வைத்து விஜய்யை அரசியலைவிட்டு அப்புறப்படுத்த நினைத்தார்களோ, அதற்கு நியாயம் கேட்கும் கேள்விகள் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும்.
அதேநேரத்தில் பிரச்சாரத்தையும், ஜெயலலிதா பாணியில் தொடங்கத் தயாராகிவிட்டார். விஜய் பிரச்சாரத்துக்கு செல்லும் நகரத்துக்கு வெளியே பிரம்மாண்டமான பட்டா நிலத்தை தேர்வு செய்து, அதில் சுமார் 1 லட்சம் பேர் அமரக்கூடிய வகையில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
அங்கு விஜய் நேரடியாக ஹெலிகாப்டரில் வரும் வகையில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படுகிறது. இதற்காக, பெங்களூருவை சேர்ந்த ஒரு ஹெலிகாப்டர் நிறுவனத்திடம் 4 ஹெலிகாப்டர்களுக்கு ஓர் ஆண்டுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
பிரச்சாரம் மாலை 5 மணி என்றால் விஜய் சரியாக 4.45 மணிக்கே ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதற்கு கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.கட்சியினர், பொதுமக்களை காக்க வைத்தல், சாலையில் வருவதால் நெரிசல், போக்குவரத்து ஸ்தம்பிப்பு போன்ற புகார்களை தடுக்கவே விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த பிரச்சார பாணியை பின்பற்றி ஜெயலலிதா ஏற்கெனவே வெற்றி பெற்றுள்ளதால், விஜய் இந்த முடிவுக்கு சம்மதித்துள்ளார்’’ என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT