Published : 23 Oct 2025 07:17 AM
Last Updated : 23 Oct 2025 07:17 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடாக 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள், அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமித்துள்ளார். கடந்த தேர்தல்களில் பூத் கமிட்டிகளுக்காக ஒதுக்கப்பட்ட தேர்தல் செலவுக்கான பணத்தை முறையாக தொகுதி பொறுப்பாளர்கள் செலவழிக்கவில்லை என பல மாவட்டங்களில் பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதை சீர்செய்யும் வகையில், கடந்த முறை அண்ணாமலை பாஜக தலைவராக இருந்தபோது பூத் கமிட்டிகளுக்கான பணத்தை வங்கி கணக்கு மூலம் அனுப்பி அதை கண்காணித்தார். ஆனாலும், பெரும்பாலான தொகுதிகளில் பூத் கமிட்டியினர் முறையாக பணிகளை மேற்கொள்ளாமல் சொதப்பியது கட்சி தலைமைக்கு தெரியவந்தது.
எனவே, இந்த முறை அதுபோன்ற செயல்கள் நடந்துவிடக்கூடாது எனவும், பிற கட்சிகளுக்கு கடும் போட்டி கொடுக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பூத் கமிட்டியினரின் பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும் எனவும் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த பாஜக நிர்வாகிகள் நயினார் நாகேந்திரனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அனைத்துத் தொகுதிகளிலும் பூத் கமிட்டியை இப்போதே பலப்படுத்துவதுடன், அவர்களின் செயல்பாடுகளையும், கட்சி நிதியை முறையாக தேர்தல் பணிக்கு செலவிடுவதையும் கண்காணிக்க தொகுதி வாரியாக ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அடங்கிய ரகசிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய குமரி மாவட்ட ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர், “அனைத்துத் தேர்தல்களிலும் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி போல் பாஜகவின் பின்புலத்தில் இருந்து வெற்றி தோல்வியை கண்காணிப்பதில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் பெரும் பங்காற்றி வருகிறோம்.
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் 1996-ல் வேலாயுதன் போட்டியிட்டு பாஜகவின் முதல் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். அப்போதே பாஜகவினருக்கே தெரியாமல் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கிராமங்கள் தோறும் பணியாற்றினோம்.
இந்த வியூகம் மூலம், கடந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல்களில் தேர்தல் செலவுக்காகவும், பூத் கமிட்டிக்காகவும் தலைமையில் இருந்து வந்த பணத்தை உண்மையாக கட்சிக்கு செலவிடாமல் சுயநலமாக செயல்பட்ட பல நிர்வாகிகள் சுருட்டியது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக வீடியோ ஆதாரங்களுடன் கட்சி தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது பாஜக தரப்பிலும் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், கட்சி மீது விசுவாசம் இன்றி சுயநலத்துக்காக செயல்படும் நிர்வாகிகளை கண்டறிந்து களையெடுக்கவும், உண்மையானவர்களை மட்டும் முக்கிய தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ஆர்எஸ்எஸ் சார்பில் தொகுதி வாரியாக ரகசிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாஜக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட கண்டறிய முடியாத வகையில் தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் சார்பில் ரகசிய குழுக்கள் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு குழுவிலும் 50-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளனர். டீக்கடைகளில் பேசப்படும் கருத்துகள், பாமர மக்கள் தெரிவிக்கும் கருத்துகள் மற்றும் தொகுதிவாரியாக நிர்வாகிகள் பாஜகவின் வெற்றிக்காக உழைக்கும் தன்மை குறித்து தினமும் ஆதாரத்துடன் ரிப்போர்ட்களை அனுப்ப ஆரம்பித்திருக்கிறோம்.
அத்துடன், பிற கட்சியினரின் செயல்பாடுகள் மற்றும் செயல் திட்டங்களையும் கண்காணித்து வருகிறோம். பாஜகவின் வெற்றிக்காக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் இப்பணிகள் தேர்தலுக்குத் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை குமரியில் இருந்து முன்கூட்டியே தொடங்கியுள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT