Published : 23 Oct 2025 05:33 AM 
 Last Updated : 23 Oct 2025 05:33 AM
சென்னை: நெல்மூட்டைகள் மழையில் நனையாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் தெரிவி்த்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்
பழனிசாமி, அரசு மீது குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது: பொய்யை உண்மை போலவே எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். அதிமுக ஆட்சியில் 700 மூட்டைகள்தான் கொள்முதல் செய்யப்பட்டன. தற்போது ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
இதற்கு தேவையான இடவசதி, பணியாளர்கள் வேண்டும். கூடுதல் நெல் பாதுகாப்பு கிடங்குகள் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் போதிய கிடங்குகள் கட்டாததும் பிரச்சினைக்கு காரணம். தற்போது மேற்கூரையால் நெல் மூட்டைகள் பாதுகாக்கப்படுகின்றன. கடந்த காலங்களைவிட 5 மடங்கு கூடுதல் நெல் விளைந்துள்ளது.
தற்போது 1,500 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நெல் மூட்டைகள் நனையாமல் பாதுகாக்க சர்க்கரை ஆலை கிடங்குகள், சிவில் சப்ளைஸ் கிடங்குகளை பயன்படுத்தியுள்ளோம். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் முழுமையாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் மட்டும் கொஞ்சம் இருப்பு உள்ளது. அதை பாதுகாப்பான இடத்தில் வைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
வடகிழக்கு பருவமழை தற்போது முதல் நாளிலிருந்தே பெய்வதால், சில இடங்களில் கொள்முதல் செய்யப்படாத நெல் மூட்டைகள் நனைந்துள்ளன. ஒரு சில இடங்களில் ஏற்பட்ட பிரச்சினையும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. சம்பா சாகுபடியில் 16 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதில் 33 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு இருந்தால் இழப்பீடு வழங்கப்படும்.
நெல் மூட்டைகள் நனையாமல் தடுக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கிடையே பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. வேளாண் துறை செயலர் வ.தட்சிணாமூர்த்தி, இயக்குநர் பி.முருகேஷ், தோட்டக்கலைத் துறை இயக்குநர் பி.குமரவேல்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT