Published : 23 Oct 2025 12:15 AM
Last Updated : 23 Oct 2025 12:15 AM
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை 15 அணைகள், 1,522 ஏரிகள் நிரம்பி உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசுத் துறைகள் மும்முரமாக இறங்கி உள்ளன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்.16-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 இடங்களில் அதி கனமழையும், 23 இடங்களில் மிக கனமழை, 53 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
இதனால் அணைகள், ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கெனவே நிரம்பியுள்ள நீர்நிலைகளுக்கு வரும் தண்ணீர் உபரி நீராக அப்படியே வெளியேற்றப்படுகிறது. உபரிநீர் வெளியேறும் நீர்நிலைகளை உன்னிப்பாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே அணைகள், ஏரிகளில் உள்ள நீர் இருப்பு குறித்து நீர்வள ஆதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மண்டலங்களில் உள்ள 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் மொத்த கொள்ளளவு 224 டிஎம்சி (2.24 லட்சம் மில்லியன் கன அடி). நேற்றைய நிலவரப்படி 196 டிஎம்சி (87.77 சதவீதம்) நீர் இருப்பு உள்ளது. மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் மொத்தம் 14,141 ஏரிகள் உள்ளன. இவற்றில் 1,522 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன. அவற்றில், அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 390 குளங்கள் நிரம்பியுள்ளன. 77 முதல் 99 சதவீதம் வரை 1,832 ஏரிகளும், 51 முதல் 75 சதவீதம் வரை 1,842 ஏரிகளும் நிரம்பியுள்ளன. அதேநேரம் 620 குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன.
சென்னை மாநகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய்க்கண்டிகை, வீராணம் ஆகிய ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13,222 மில்லியன் கன அடி. நேற்றைய நிலவரப்படி நீர் இருப்பு 9,986 மில்லியன் கன அடியாக (75.53 சதவீதம்) உள்ளது. இதே தேதியில் கடந்த ஆண்டு நீர் இருப்பு 6,105 மில்லியன் கன அடியாக இருந்தது. மேலும், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகியவற்றில் முன்கூட்டியே வெள்ள நீர் திறக்கப்பட்டு போதுமான இடைவெளி பராமரிக்கப்பட்டு வரு வதால், மிக கன மழை பெய்தாலும், வெள்ள நீர் திறப்பின் அளவு மட்டுப்படுத்தப்பட்டு அடையாறு மற்றும் கொசஸ்தலை ஆற்றில் பாதுகாப்பாக கடலைச் சென்றடையும். எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு நீர்வள ஆதாரத் துறை தெரிவித்துள்ளது.
தயார் நிலை: நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், துறை செயலர் ஜெ.ஜெயகாந்தன் முன்னிலையில் காணொலி காட்சி வாயிலாக நேற்று பருவமழை முன்னேற்பாடு, வெள்ளத் தடுப்பு, நீர் இருப்பு, நீர்நிலைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, மண்டல தலைமைப் பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ஏற்கெனவே தற்போதுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியில் சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 12 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலர்களாக தமிழக அரசு நியமித்துள்ளது.
மேலும் காவல் துறையில் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், உள்ளாட்சி அமைப்புகள் தயார் நிலையில் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், போதிய நிவாரண மையங்கள் அமைத்தல், உணவகங்களுக்கு தேவையான பொருட்களை இருப்பில் வைத்தல், முகாம்களில் தங்கும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்தல் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நிர்வாகம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
அமைச்சர் ஆய்வு: பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று சென்னை ஓஎம்ஆர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட நெடுஞ்சாலைத் துறை மூலம் பொறுப்பு அலுவலர்களாக 7 தலைமைப் பொறியாளர்களை நியமித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT