Published : 22 Oct 2025 06:19 PM
Last Updated : 22 Oct 2025 06:19 PM
மதுரை: 'கல்லை கடவுளாக்க தெரிந்தவனுக்கு மனிதனாக மாறத் தெரியவில்லை, முதலில் நாம் மனிதர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்' என்று கரூரில் அழுததை விமர்ச்சித்தவர்களுக்கு மதுரையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ‘தமிழ் முழக்கம் ’ மேடைப்பேச்சு - ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி பன்னாட்டு பயிலரங்கம் 5 நாட்கள் நடக்கிறது. இதற்கான தொடக்க விழா இன்று நடந்தது. தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மதுரை ஆட்சியர் பிரவீன் குமார், பேச்சாளர் சுகிசிவம், உலக தமிழ் சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, கோ.தளபதி எம்எல்ஏ மற்றும் 400-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 38 மாவட்டங்களில் இருந்து இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு 18 ஆளுமைகள் பயிற்சி அளிக்கின்றனர். மழையால் பள்ளி வளாகங்களில் தேங்கிய நீரை உடனே அகற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் மின் கசிவுகள் ஏதும் உள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம். மழைக்காலங்களில் சூழலுக்கேற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
கரூரில் சம்பவத்தின்போது, நீங்கள் அழுத வீடியோ காட்சிகளுக்கு தவெக மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து பேசுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் பதிலளித்தபோது, “உணர்ச்சிகளும், அறிவும் சார்ந்து சமமான பேச்சு அமைய வேண்டும். இது பேச்சாளர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் எடுத்துக்காட்டாக கூறலாம். உணர்ச்சி அதிகமாகி அறிவு குன்றி இருந்தால் விலங்குக்கு சமம். அறிவு அதிகமாகி, உணர்ச்சிகள் குன்றியிருந்தால் அது மரத்திற்கு சமமானது என திருவள்ளுவர் கூறியுள்ளார். முதலில் நாம் மனிதர்கள் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். கல்லை கடவுளாக்க தெரிந்தவனுக்கு மனிதனாக மாறத்தெரியவில்லை.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT