Published : 22 Oct 2025 06:49 AM
Last Updated : 22 Oct 2025 06:49 AM
சென்னை: தேர்தல் ஆதாயத்துக்காக முழுநேர டிஜிபி-யை நியமிக்காமல் தமிழக மக்களின் பாதுகாப்போடு முதல்வர் ஸ்டாலின் விளையாடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு டிஜிபி-யின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதமே நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில், தங்களுக்கு ஏற்ற நபரை, தேர்தல் நேரத்தில் தங்களுக்கு உதவியாக இருக்கும் அதிகாரியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வெறும் தேர்தல் ஆதாயத்துக்காக, சட்டம்- ஒழுங்கை காக்க வேண்டிய காவல் துறைக்கு முழுநேர டிஜிபி-யை நியமிக்காமல் இழுத்தடித்து, தமிழக மக்களின் பாதுகாப்போடு விளையாடிக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
புதிய டிஜிபி-க்கான 3 பெயர்கள் கூட இறுதி உத்தேசப் பட்டியலை யுபிஎஸ்சி அனுப்பிவிட்டதாக செய்திகள் வரும் நிலையில், மூவரில் ஒருவரை புதிய டிஜிபியாக நியமிப்பதில் முதல்வருக்கும், அவரின் திமுக அரசுக்கும் என்ன சிக்கல் இருக்கிறது?
இந்த அவல நிலையில், காவலர்கள் வீரவணக்க நாளில் மட்டும் போட்டோஷூட் எடுத்துக்கொள்ள ஆர்வமாக கலந்துகொள்வது வேடிக்கையின் உச்சம். அதுவும் கருப்புப் பட்டை வேறு. இந்த பட்டைக்கு ரத்தக் கொதிப்பு தான் காரணமா என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கேட்பாரா அல்லது இதை சிறைக் கைதி சீருடை என்று அமைச்சர் ரகுபதி சொல்வாரா? இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT