Published : 22 Oct 2025 06:43 AM
Last Updated : 22 Oct 2025 06:43 AM
சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு பருவமழை கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை குறித்தும், முன்னேற்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலி்ன் ஆய்வு மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தால், ஆரஞ்சு, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக சென்று அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, ஆய்வு செய்யும்படி முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, திருவள்ளூருக்கு எல்காட் நிறுவன மேலாண் இயக்குநர் கே.பி.கார்த்திகேயன், காஞ்சிபுரம் - தாட்கோ மேலாண் இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி, செங்கல்பட்டு - தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநர் கிரந்திகுமார் பாடி, விழுப்புரம் - தொழிலாளர் நலத்துறை இயக்குநர் எஸ்.ஏ.ராமன், கடலூர் - சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை இயக்குநர் டி.மோகன், மயிலாடுதுறை - கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் கவிதா ராமு, திருவாரூர் - ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் டி.ஆனந்த். நாகை - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண் இயக்குநர் ஏ.அண்ணாதுரை, தஞ்சாவூர் - தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழக மேலாண் இயக்குநர் எச்.கிருஷ்ணனுன்னி, கள்ளக்குறிச்சி - மாநில தேர்தல் ஆணைய செயலர் பி..வெங்கடப்பிரியா, அரியலூர் - இந்திய மருத்துவம் மற்றும் ஹோமி யோபதி ஆணையர் எம்.விஜயலட்சுமி, பெரம்பலூர் - மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் எம்.லட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னையில் 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடுகளை உடனடியாக தொடங்குமாறும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT