Published : 22 Oct 2025 06:27 AM
Last Updated : 22 Oct 2025 06:27 AM
சென்னை: தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக இன்று 4,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறையால் சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். பேருந்துகள், ரயில்கள், விமானம், சொந்த வாகனங்கள் மூலம் 16 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சொந்த ஊர் சென்றனர்.
தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் கடந்த 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 4 நாட்களில் 15,429 பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் 7.95 லட்சம் பேர் பயணம் செய்தனர்.
இதனிடையே, சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்ப வசதியாக நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அரசு அலுவலக பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இன்றைய தினம் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளனர். ஆதலால் நேற்று மாலை முதல் மீண்டும் சென்னை நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கினர். இதன்படி நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 2,245 பேருந்துகள் இயக்கப்பட்டன.
மேலும் சில ஐடி நிறுவன ஊழியர்களுக்கு நேற்றும், இன்றும் வீட்டில் இருந்து பணிபுரிய சலுகை வழங்கப்பட்டது. இதனால் ஐடி, தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் கூடுதல் நாட்கள் விடுப்பு எடுத்தவர்கள் இன்றும், நாளையும் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்று வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 2,392 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதேபோல சென்னையைத் தவிர மற்ற நகரங்களுக்கு 1,485 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாளை சென்னைக்கு கூடுதலாக 813 பேருந்துகளும், மற்ற நகரங்களுக்கு 870 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வெளியூர்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் நெரிசலில் சிக்காமல் இருக்க, போக்குவரத்து காவல் துறையும், போக்குவரத்து கழகங்களும் சேர்ந்து பல்வேறு சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி உள்ளன.
குறிப்பாக செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள்கோவில் பகுதிகளில் அதிக அளவில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அதிகாலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் பயணிகளுக்காக மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் போதிய அளவுக்கு இணைப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் தெற்கு ரயில்வே சார்பில் இன்று திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 11.55 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் அந்த வழித்தடத்தில் உள்ள சாத்தூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூருக்கு நாளை காலை 11 மணிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT