Published : 22 Oct 2025 03:51 AM
Last Updated : 22 Oct 2025 03:51 AM
சென்னை: டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நெற்பயிர்கள் பெரும் சேதம் அடைந்துள்ளன. இதனால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் ஆய்வு செய்தார்.
கடந்த 16-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் அன்று முதல் 3 நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. கடந்த 19-ம் தேதி மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் இருந்து திருவாரூர், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வு நடத்திய மாவட்டங்களில் சராசரியாக 56.61 மி.மீ. மழை பெய்துள்ளதால், மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் தங்குவதற்காக முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் முகாம்களில் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்யவும் முதல்வர் அறிவுறுத்தினார். சென்னையில் முன்னேற்பாடுகள் குறித்து கேட்ட முதல்வர், மழைநீர் தேங்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில், நெல் கொள்முதல் சேமிப்பு, நகர்வு மற்றும் அரவை குறித்தும் ஆய்வு செய்த முதல்வர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்ட விவசாயிகள் பாதிக்காத வகையில் நெல் கொள்முதலை தொய்வின்றி நடத்தவும், மழையால் நெல் மூட்டைகள் சேதம் அடையாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டார். நெல்லின் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக தளர்த்த மத்திய அரசுக்கு தமிழக அரசு முன்மொழிவு அனுப்பியுள்ள நிலையில் இதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று உருவானது. அது நேற்றே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்தது. இன்று தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழக - புதுவை - தெற்கு ஆந்திர கடலாரப் பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக் கூடும்.
இன்று விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புகிறது: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை - சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்ததால் செங்கை, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 100 கன அடி உபரிநீர் மதகுகள் வழியே வெளியேற்றப்பட்டு வருவதால் யாரும் அடையாறு ஆற்றுக்குள் இறங்கவோ, வீடியோ எடுக்கவோ கூடாது என்று நீர்வளத் துறையினரும் மாவட்ட நிர்வாகத்தினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஏரி மொத்தம் 25.51 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உடையது. ஏரியின் மொத்த உயரம் 24 அடியாகவும், அதன் நீரின் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் அலுவலர்கள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு முறை நீரை அளவீடு செய்து வருகின்றனர். மேலும், தற்போது அதிகப்படியான நீர் வந்து கொண்டிருப்பதால் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்பு நேற்று மாலை மதகுகளின் வழியே 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT