Published : 21 Oct 2025 09:05 PM
Last Updated : 21 Oct 2025 09:05 PM

102 அடியை எட்டிய பவானி சாகர் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு: பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதையடுத்து, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரம் கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் இன்று மதியம் 102 அடியை எட்டியது. இதையடுத்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு விநாடிக்கு 9,300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தொட்ட பாளையம், தொப்பம்பாளையம், அய்யன் சாலை, எரங்காட்டூர், சத்தியமங்கலம், அக்ரஹாரம், பாத்திமா நகர், அம்மாப்பேட்டை போன்ற பகுதிகளில் பவானி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளநீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. இதனால் பவானி ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ, துணி துவைக்கவோ கூடாது என நீர்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் பவானி சாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளமாக உள்ள கொடிவேரி தடுப்பணையில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3-வது நாளாக இன்றும் கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடிவேரி சுற்றுலா வர திட்டமிட்ட சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x