Published : 20 Oct 2025 06:19 AM
Last Updated : 20 Oct 2025 06:19 AM
சென்னை: திருவேற்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை மூடுவதற்கு பாமக தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையை அடுத்த திருவேற்காடு காடுவெட்டி பகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இடமாற்றம் என்ற பெயரில் மூடுவிழா நடத்த தமிழக அரசு துடிக்கிறது. கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை அளித்து வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை மூட முயல்வது கண்டிக்கத்தக்கது.
காடுவெட்டி பகுதியில் 1967-ம் ஆண்டில் அரசு மகப்பேறு மையமாக தொடங்கப்பட்ட இந்த மருத்துவ மையம், 2013-ல் விரிவாக்கம் செய்யப்பட்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட்டு வருகிறது. 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இதனால் பயனடைந்து வருகின்றன. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை நூம்பல் புலியம்பேடு பகுதிக்கு மாற்ற திமுக அரசு முடிவு செய்திருக்கிறது. அங்கு இதை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற 2022-ம் ஆண்டில் ரூ.1.20 கோடி ஒதுக்கப்பட்டது.
அந்த நிதியைக் கொண்டு காடுவெட்டி பகுதியிலேயே ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தியிருந்தால் எந்த சிக்கலும் ஏற்பட்டிருக்காது. ஆனால், நூம்பல் புலியம்பேடு பகுதியில் புதிதாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுவது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும். புதிதாக அமைக்கப்படும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 7 கிமீ தொலைவில் அமைக்கப்படுகிறது. அங்கு செல்ல போக்குவரத்து வசதியும் இல்லை. சாலை வசதியும் இல்லை.
இத்தகைய சூழலில் திருவேற்காடு மக்கள் அங்கு சென்று மருத்துவம் பெற இயலாது. மருத்துவமனைகள் மக்களின் நலனுக்காகத்தான் இருக்க வேண்டும். எனவே, காடுவெட்டி ஆரம்ப சுகாதார நிலையம் இப்போது இருக்கும் இடத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்.
அதற்கு கூடுதல் நிதி ஒதுக்கி மேம்படுத்த வேண்டும். நூம்பல் புலியம்பேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை தனித்து செயல்பட அனுமதிக்க வேண்டும். அந்த நிலையத்துக்கு தேவையான மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT