Published : 20 Oct 2025 06:13 AM
Last Updated : 20 Oct 2025 06:13 AM
சென்னை: தமிழகம், குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் நோட்டரி வழக்கறிஞர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய சட்டம், நீதி அமைச்சகத்தின் சட்ட விவகாரத் துறை அக். 17-ம் தேதியிட்ட அறிவிக்கை மூலம் நோட்டரிகள் (திருத்தம்) விதிகள் 2025-ஐ அறிவித்துள்ளது. மேலும், நோட்டரிகள் சட்டத்தால் (1952) வழங்கப்பட்ட அதிகாரங்களின்கீழ் நோட்டரிகள் விதிகள் 1956, மேலும் திருத்தம் செய்யப்படுகிறது.
இதன்மூலம் தமிழகம், குஜராத், ராஜஸ்தான், நாகாலாந்து ஆகிய மாநில அரசுகளால் நியமிக்கப்படக்கூடிய அதிகபட்ச நோட்டரிகளின் (சான்று உறுதி அலுவலர்கள்) எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நோட்டரிகள் எண்ணிக்கை தமிழகத்தில் 2,500-ல் இருந்து 3,500 ஆகவும், குஜராத்தில் 2,900-ல் இருந்து 6,000 ஆகவும், ராஜஸ்தானில் 2,000-ல் இருந்து 3,000 ஆகவும், நாகாலாந்தில் 200-ல் இருந்து 400 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மக்கள்தொகை வளர்ச்சி, மாவட்டங்கள், வருவாய் வட்டங்களின் எண்ணிக்கை, நோட்டரி சேவைகளுக்கான தேவை ஆகியவற்றை அங்கீகரித்து, அந்தந்த மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ‘நோட்டரி பப்ளிக்’ எனப்படும் நோட்டரி வழக்கறிஞர்கள் சொத்து ஆவணங்கள், பத்திரங்கள், சாட்சியங்கள் போன்றவற்றுக்கு சான்றளித்து அவற்றுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குகின்றனர்.
ஓர் ஆவணத்தின் நகல் உண்மையான நகல் என்பதற்கும், ஒருவரது அடையாளத்தை உறுதி செய்வதற்கும் அவர்கள் சான்று அளிக்கின்றனர். பிரமாணப் பத்திரங்கள் உள்ளிட்ட இதர சட்ட ஆவணங்களின் உண்மைத் தன்மையை சரிபார்த்து அவற்றை பதிவு செய்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT