Published : 17 Oct 2025 08:30 PM
Last Updated : 17 Oct 2025 08:30 PM
சென்னை: “மதுரை மாநகராட்சியின் சொத்து வரி வசூலில் சுமார் ரூ.150 கோடிக்கும் அதிகமாக முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. மாநிலம் முழுவதும் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள், ஊழல் வரி வசூலில் நடக்கும் மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளியே வரும்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மதுரை மாநகராட்சியின் சொத்து வரி வசூலில் சுமார் ரூ.150 கோடிக்கும் அதிகமாக முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது கடும் அதிர்ச்சியையும் பல்வேறு குழப்பங்களையும் ஏற்படுத்துகிறது.
திமுக அமைச்சர்களுக்கும், முக்கியப் பிரமுகர்களுக்கும் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகிக்கக் கூடிய மதுரை முறைகேடு விவகாரத்தில் மேயரின் கணவர் தடாலடியாக கைது செய்யப்படுவதையும், மேயர் கமுக்கமாக ராஜினாமா செய்வதையும் பார்த்தால், சிறிய மீன்களைப் பலியிட்டு பெரிய தலைகளைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் வலுக்கிறது.
ஊழல் குற்றச்சாட்டு, நிர்வாகக் குளறுபடிகள், நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தமிழகத்தின் முக்கிய மாநகராட்சிகளான கோவை, நெல்லை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த திமுக மேயர்கள் இதுவரை ராஜினாமா செய்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது மதுரையும் இணைந்திருப்பது, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பதில் திமுக அரசு எந்தளவிற்கு தோல்வியடைந்துள்ளது என்பதற்கான எடுத்துக்காட்டு.
மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டிய தமிழக உள்ளாட்சி அமைப்புகளை, மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் கருவிகளாக மாற்றி வைத்திருப்பது தான் திமுக அரசின் நாடு போற்றும் நல்லாட்சியா? மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிக்க மேயர்கள் ராஜினாமா, புது மேயர் பொறுப்பேற்பு எனத் திமுக அரசு என்னதான் நாடகம் ஆடினாலும், மாநிலம் முழுவதும் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள், ஊழல் வரி வசூலில் நடக்கும் மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளியே வரும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT