Published : 16 Oct 2025 03:51 PM
Last Updated : 16 Oct 2025 03:51 PM
திருவள்ளூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு விநாடிக்கு 4,500 கன அடியாகவும், புழல் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு விநாடிக்கு 500 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தையொட்டியுள்ள ஆந்திர பகுதிகள், பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகள், ராணிப்பேட்டை மாவட்டப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
அதன் காரணமாக, கொசஸ்தலை ஆறு மற்றும் கல்லாறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அவ்வாறு வரும் வெள்ள நீர், ஆந்திர மாநிலம்- கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நீர், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் நீர் ஆகியவை சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால், பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்ததால், பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மதியம் முதல் பூண்டி ஏரியில் இருந்து உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து வருகின்றனர் நீர் வள ஆதாரத் துறையினர்.
தொடக்கத்தில் விநாடிக்கு 700 கன அடி என, திறக்கப்பட்டு வந்த உபரி நீரின் அளவு, நேற்று மாலை விநாடிக்கு 1,500 கன அடியாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 6 மணி நிலவரப்படி, 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு மற்றும் 35 உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 3,081 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்ட உயரம், 34.79 அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 1,810 கன அடியாகவும் இருந்தது.
இந்த நீர் வரத்து, ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் அணையில் நேற்று இரவு முதல், இன்று அதிகாலை வரை விநாடிக்கு 500 கன என திறக்கப்பட்ட உபரிநீரால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, இன்று காலை 8 மணியளவில், பூண்டி ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவை விநாடிக்கு 4,500 கன அடியாக அதிகரித்துள்ளனர் நீர் வள ஆதாரத் துறையினர்.
அதே போல், சென்னைக்கு குடிநீர் தரும் மற்றொரு ஏரியான புழல் ஏரி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவும், 21.20 அடி உயரமும் கொண்டது. இந்த ஏரிக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையால் நீர் வரத்து உள்ளது. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மதியம் முதல் புழல் ஏரியிலிருந்து உபரி நீரை திறந்து வருகின்றனர் நீர் வள ஆதாரத் துறையினர்.
அந்த உபரி நீர், தொடக்கத்தில் விநாடிக்கு 200 கன அடி என, திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி, புழல் ஏரியில் 2,980 மில்லியன் கன அடி நீர் இருப்பும், 19.84 அடி நீர் மட்டமும் உள்ளது. ஆகவே, புழல் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவை இன்று காலை 8 மணியளவில் விநாடிக்கு 500 கன அடியாக அதிகரித்தனர் நீர் வள ஆதாரத் துறையினர்.
ஆகவே, பூண்டி ஏரி மற்றும் புழல் ஏரியின் உபரி நீர் வெளியேறும் கொசஸ்தலை ஆற்றின் இரு கரையோரங்கள் மற்றும் புழல் ஏரி உபரி நீர் கால்வாய் ஓரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட ஆட்சியர் பிரதாப் விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT