Last Updated : 16 Oct, 2025 03:37 PM

1  

Published : 16 Oct 2025 03:37 PM
Last Updated : 16 Oct 2025 03:37 PM

புதிய விண்ணப்பதாரர்களுக்கு டிச.15 முதல் மகளிர் உரிமைத்தொகை - சட்டப் பேரவையில் உதயநிதி

சென்னை: புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என சட்டப் பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழகம் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்க்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாள் அன்று மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மகளிரின் பொருளாதார விடுதலைக்கு வழிவகுக்கும் இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் ஒரு கோடியே 14 லட்சம் மகளிருக்கு இந்த உரிமைத் தொகையை, முதல்வர் வழங்கி வருகிறார். இதுவரை ரூ.30,000 கோடி உரிமைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த 26 மாதங்களாக, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கி, இந்த ஆண்டு வரை, இன்றைக்கு 16 ஆம் தேதி ஏற்கெனவே ஆயிரம் ரூபாய் கொடுத்தாகிவிட்டது.

தமிழ்நாட்டு மகளிருக்கு, இதுவரை கிட்டத்தட்ட ஒரு கோடியே 14 லட்சம் மகளிர் ஒவ்வொருவருக்கும், சுமார் 26 ஆயிரம் ரூபாயை நம்முடைய அரசு கொடுத்துள்ளது.

இந்த திட்டத்தில் மேலும் சில மகளிரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக, சில விதிகளில் முதல்வர் ஸ்டாலின் தளர்த்தி அறிவித்தார். அரசு மானியத்தில் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் குடும்பங்கள் உள்ளிட்ட சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது, தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பங்கேற்று, மகளிர் உரிமைத் தொகை பெற புதிதாக 28 லட்சம் பெண்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நவம்பர் 14, 2025 அன்று முடிவடைய உள்ளன. இதற்கிடையே, புதிதாக உரிமைத் தொகை கோரி பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் வருவாய்த் துறைமூலம் Field Inspection செய்யப்பட்டு வருகின்றன.

இவர்களது விண்ணப்பங்கள் வருவாய்த் துறை மூலம் ஆய்வு செய்து நவம்பர் 30க்குள் நிறைவு பெற்று, தகுதியான மகளிருக்கு வரும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார்” என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x