Published : 16 Oct 2025 03:32 PM
Last Updated : 16 Oct 2025 03:32 PM
சென்னை: தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024- 2025 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 2025- 2026ல் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக் கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு அச்சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் (போனஸ்) வழங்கப்படும். உபரி தொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தீபாவளி பண்டிகையினை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏதுவாக 10 விழுக்காடு மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணிபுரிந்து போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர லாபம் ஈட்டும் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர லாபம் ஈட்டாத தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களாக இருப்பின் அவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.3,000ம், தொடக்க சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2,400ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 44,081 பணியாளர்களுக்கு ரூ.44 கோடியே 11 லட்சம் மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கை கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மிகவும் ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும், ஊக்கத்துடனும் பணியாற்றுவதையும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடவதையும் உறுதி செய்திட வழிவகை செய்யும்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT