Last Updated : 16 Oct, 2025 03:15 PM

 

Published : 16 Oct 2025 03:15 PM
Last Updated : 16 Oct 2025 03:15 PM

அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக் கழகங்களாக்க அனுமதிப்பதா? - அன்புமணி கண்டனம்

சென்னை: தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிப்பதன் மூலம் கல்வியிலும் இட ஒதுக்கீட்டை காவு கொடுக்கத் துணிந்திருக்கிறது திமுக அரசு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக்க அனுமதிக்கும் வகையில் தனியார் பல்கலைக்கழகங்களின் சட்டத்தில் திருத்தம் செய்ய திமுக அரசு முடிவு செய்திருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் கல்வியையும், சமூகநீதியையும் பாதிக்கக்கூடிய திமுக அரசின் இந்த நடவடிக்கையை பாமக கண்டிக்கிறது.

2019 ஆம் ஆண்டின் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்வரைவை சட்டப்பேரவையில் திமுக அரசு தாக்கல் செய்திருக்கிறது. இந்த முன்வரைவு நிறைவேற்றப் பட்டால் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இதுவரை மாணவர்களுக்கு, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், மிகக்குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வந்த கல்வி நிறுத்தப்படும்.

தமிழ்நாட்டின் உயர்கல்விச் சூழலில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந்த சட்டத் திருத்த முன்வரைவை விவாதம் கூட நடத்தாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்ற திமுக அரசு திட்டமிட்டிருக்கிறது. இதை மன்னிக்கவே முடியாது.

திமுக அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத் திருத்த முன்வரைவின் அடிப்படையில், தமிழ்நாட்டில் இப்போது செயல்பட்டு வரும் தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் ஆகியவற்றை அவற்றின் நிர்வாகங்கள் விரும்பினால் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றிக் கொண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 30 ஆம் பிரிவின்படி பல்கலைக்கழகங்களாக நிர்வகிக்க முடியும்.

அவ்வாறு மாற்றப்படும் போது, மருத்துவம் சார்ந்த படிப்புகளை நடத்தும் சிறுபான்மை பல்கலை.கள் 50% இடங்களையும், சிறுபான்மையினர் அல்லாத பல்கலைக்கழகங்கள் 65% இடங்களையும் மட்டும் அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கினால் போதுமானது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் ஆகியவை பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும் போது, அவற்றுக்கு இந்த கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. இந்த கல்வி நிறுவனங்கள் அவற்றின் விருப்பம் போல மாணவர்களை சேர்த்துக் கொள்ள முடியும். மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசின் 69% இட ஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் எதுவும் கிடையாது.

மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும் போது கூட அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் இடங்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படும். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை இட ஒதுக்கீடு இல்லாமல் பல்கலைக்கழக நிர்வாகங்கள் விருப்பம் போல நிரப்பிக் கொள்ளலாம்.

கல்விக் கட்டணம், பாடத்திட்டம் ஆகியவற்றைப் பொறுத்தவரை தனியார் பல்கலைக்கழகங்களை தமிழக அரசு எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது. அரசு உதவி பெறும் கல்லூரிகளைப் பொறுத்தவரை, பேராசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட செலவுகளுக்கு அரசு நிதி உதவி வழங்குகிறது. உதவி பெறும் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும் போது, அவற்றுக்கு அரசு வழங்கும் நிதியுதவி தொடருமா? என்பது குறித்து தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், அத்தகைய கல்வி நிறுவனங்களில் இப்போது பயிலும் மாணவர்கள் இதே சூழலில் படிப்பை முடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படியானால், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அரசின் நிதி நிறுத்தப்படும் என்று தான் பொருள் கொள்ள வேண்டியுள்ளது.

அப்படியானால், பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும் கல்வி நிறுவனங்களில் புதிதாக சேரும் மாணவர்கள் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். தமிழ்நாடு அரசின் நிதி நிறுத்தப்படும் சூழலில் அங்கு பணியாற்றும் பேராசிரியர்களுக்கு இப்போது வழங்கப் படும் ஊதியம் வழங்கப்படாது. இவை அனைத்தும் சமூக நீதிக்கு துரோகம் இழைக்கும் செயல்கள் ஆகும்.

தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் இந்த சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால், தனியார் கல்லூரிகள் அனைத்தும் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டு, கட்டணக் கொள்ளை நடத்தும் மையங்களாக மாறி விடும். முந்தைய அதிமுக ஆட்சியில் 2019 ஆம் ஆண்டில் தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்த சட்டத்தின்படி புதிதாக தனியார் பல்கலைக்கழகங்களை தொடங்குவதற்கு மட்டும் தான் அனுமதிக்கப்பட்டது. அதற்கும் கூட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

ஆனால், அந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்த்தியிருக்கும் திமுக அரசு, பழைய கல்லூரிகளையும் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கவிருக்கிறது. ஏராளமான தனியார் கல்லூரிகள் என்ன விலை கொடுத்தாவது தனியார் பல்கலைக்கழகமாக மாற வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த நிலையில், அவற்றின் விருப்பத்தை நிறைவேற்றவே திமுக அரசு இந்த சட்டத் திருத்த முன்வரைவை கொண்டு வந்திருப்பதாக தெரிகிறது.

கல்வியை கடைச் சரக்காக மாற்றுவது தான் திமுக காலம்காலமாக கடைபிடித்து வரும் கொள்கை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அரசு வேலைவாய்ப்புகளில் குத்தகை முறை நியமனங்கள், தற்காலிக நியமனங்கள் ஆகியவற்றை அறிமுகம் செய்ததன் மூலம் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை திமுக அரசு ஒழித்து வருகிறது.

இப்போது தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிப்பதன் மூலம் கல்வியிலும் இட ஒதுக்கீட்டை காவு கொடுக்கத் துணிந்திருக்கிறது. சமூகநீதிக்கு எதிரான இந்த சட்டத் திருத்த முன்வரைவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். சட்டப்பேரவையில் இந்த சட்ட முன்வரைவை பாமக உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x