Published : 16 Oct 2025 05:30 AM
Last Updated : 16 Oct 2025 05:30 AM
கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதிகளில் மழை காரணமாக வயலில் தேங்கிய மழைநீரில் 500 ஏக்கர் குறுவைப் பயிர்கள் சாய்ந்தன. பாபநாசம் வட்டம் அம்மாபேட்டை, புத்தூர், உடையார்கோவில், அருந்தவபுரம், உத்தன்குடி உள்ளிட்ட 10-க்கும் அதிகமான கிராமங்களில் கடந்த ஜூலை இறுதியில் 500 ஏக்கருக்கு அதிகமான பரப்பில் குறுவை நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. நெற்பயிர்கள் வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், இப்பகுதி வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை பலத்த மழை பெய்ததால் நெற்பயிர்கள் அனைத்தும் வயலில் சாய்ந்து விட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் கூறியதாவது: அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழையால் 500-க்கும் அதிகமான ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் நீரில் சாய்ந்துவிட்டன.
இப்பகுதியில் 10-க்கும் அதிகமான கிராமங்களுக்கு வடிகாலாக உள்ள தஞ்சாவூர்- நாகை சாலையோர வாய்க்கால் மற்றும் கோவில்வெண்ணி வாய்க்கால் ஆகியவை பல ஆண்டுகளாக தூர் வாரப்படாததே காரணம். இந்த வாய்க்கால்களைத் தூர் வார வேண்டும் என பலமுறை முறையிட்டும், போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், தற்போது வயலில் தேங்கியுள்ள மழைநீர் வடியாமல் இருந்தால் ஓரிரு நாட்களில் நெற்பயிர்கள் முளைத்துவிடும் அபாயம் உள்ளது.
இதனால், நெல்மணிகள் பதராகி, அறுவடை செய்தாலும் விற்க முடியாத நிலை ஏற்படும். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவழித்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும். எனவே, மழையால் பாதிக்கப்பட்டுள்ள குறுவை நெல் வயல்களை ஆய்வு செய்து, மழைநீரை வடியச் செய்யவும், மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT