Published : 15 Oct 2025 01:43 PM
Last Updated : 15 Oct 2025 01:43 PM
திருப்பூர்: வடமாநிலங்களுக்கு செல்லும் முன்பதிவு ரயில் பெட்டியில், முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு பெற்ற பயணிகள் ஏறியதால், முன்பதிவு செய்த பயணிகள் அவதி அடைந்தனர்.
தீபாவளி பண்டிகைக்கு திருப்பூரில் வாழும் வடமாநில தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். வடமாநிலத்தவர்கள் பலரும் குடும்பம் குடும்பமாக சொந்த ஊர்களுக்கு தங்களது குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் ரயில்களில் சென்றுவருவதால் திருப்பூர் ரயில் நிலையத்தில் அளவுகடந்த கூட்டம் கடந்த 11-ம் தேதி முதல் காணப்படுகிறது.
இந்நிலையில் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா செல்லும் விரைவு ரயில் திருப்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது முன்பதிவு செய்யாமல் இருந்த பயணிகள் பலரும், முன்பதிவு ரயில் பெட்டிகளில் ஏறியதால், முன்பதிவு செய்து பயணித்து வந்த பயணிகள் பலரும் அவதி அடைந்தனர்.
முன்பதிவு பெட்டிகளில் துணி மூட்டைகள், பைகள் உள்ளிட்டவற்றுடன் ஏறியதால் முன்பதிவு பெட்டியில் பதிவு செய்து பயணித்த பயணிகள் கடும் அவதி அடைந்ததுடன், ரயில்வே துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ரயில் பயணச்சீட்டு பரிசோதகரை முற்றுகையிட்டனர்.
இது தொடர்பாக பயணச்சீட்டு பரிசோதகர் உரிய பதில் அளிக்காத நிலையில் அதிருப்தி அடைந்தனர். முன்பதிவு பெட்டியில் அத்துமீறி பயணம் செய்யும் பயணிகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
ரயிலில் பயணித்த முதியவர்கள் கழிவறைக்கு செல்ல முடியாமலும், ரயிலில் உரிய வசதிகளுடன் செல்ல முடியாமலும் அவதியடைந்தனர். திருப்பூர், ஈரோடு, கரூர், கோவை போன்ற தொழில் நகரங்களுக்கு தீபாவளி பண்டிகையின் போது கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என ஆண்டுதோறும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படுகிறது.
ஆனால் ஒவ்வொருமுறையும் ரயில்வே நிர்வாகம் பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் ரயில்களை இயக்காமல் ஏமாற்றி வருவதாகவும் வேதனை தெரிவித்தனர். மத்திய ரயில்வே துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் ரயில்நிலைய மேலாளர் கிருஷ்ணா நந்தன் கூறும்போது, “தீபாவளி பண்டிகைக்கு பலரும் வடமாநிலங்களுக்கு செல்வதால், வழக்கமான கூட்டத்தை விட பல மடங்கு கூட்டம் ரயில் நிலையத்தில் உள்ளது. முன்பதிவு பெட்டியில் உரிய நபர்கள் மட்டும் ஏறுவதற்கு வசதியாக, கூடுதலாக ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். விரைவில் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT