Published : 14 Oct 2025 09:34 PM
Last Updated : 14 Oct 2025 09:34 PM
கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். எனினும், பல்வேறு காரணங்களால் விஜய்யின் கரூர் பயணம் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூற, விஜய் கரூர் வந்து மக்களை சந்திப்பதற்காக தவெக சார்பில், டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதற்கு, கரூர் எஸ்.பி.யை சந்தித்து மனு அளிக்க அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை கரூரில் தனியார் மண்டபத்துக்கு வரவழைத்து, அங்கு அவர்களை விஜய் சந்தித்து ஆறுதல் கூறி, இழப்பீடு தொகை வழங்க திட்டமிடப்பட்டது. இதற்காக அக்டோபர் 13 மற்றும் அக்டோபர் 17-ம் தேதிகளில் விஜய் கரூர் வருவதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக, தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் கரூர் எஸ்.பி.யை சந்தித்து அக்டோபர் 11-ம் தேதி கடிதம் அளித்தனர். மேலும், கரூர் - ஈரோடு சாலையில் உள்ள கேஆர்வி மெரிடியன் ஓட்டலில் நிகழ்ச்சிக்காக தவெக சார்பில் அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. இந்த ஓட்டல் ஏற்கெனவே பிரச்சார கூட்டம் நடந்த இடத்துக்கு அருகேயுள்ளதால் வேறு இடத்தை தேர்வு செய்யுமாறு போலீஸார் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், விஜய் மீண்டும் கரூர் வரும்போது, அதிகளவு ரசிகர்கள் வர வாய்ப்புள்ளதால், எதிர்பாராதவிதமாக ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், தங்கள் ஓட்டல், மண்டபம் பெயர் பாதிக்கப்படும். ஆளுங்கட்சியின் கோபத்துக்கும் ஆளாக நேரிடலாம் என்பதால், ஓட்டல், திருமண மண்டபங்களை வழங்க அதன் உரிமையாளர்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. எனவே, இடம் தேர்வு செய்வதில் எழுந்துள்ள சிக்கல் காரணமாக, விஜய் அக்டோபர் 17-ம் தேதி வருவதாக இருந்தது மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இடத்தை தேர்வு செய்த பிறகு, விஜய் வரும் தேதி முடிவு செய்யப்படும் எனவும், இடம் வழங்க பலரும் தயக்கம் காட்டி வருவதாகவும் தவெகவினர் தெரிவித்தனர். பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விஜய்யின் வருகை தீபாவளிக்கு பிறகே இருக்கும் என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
முன்னதாக, கரூர் வேலுசாமிபுரத்தில் செப்டம்பர் 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்றிரவு கரூர் வந்து அஞ்சலி செலுத்தி, ஆறுதல் கூறி, நிவாரண நிதி அறிவித்து சென்றார். தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் குழு உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
தவெக தலைவர் விஜய் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்தார். ஆனால், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையோ, காயமடைந்தவர்களையோ தவெக நிர்வாகிகள் நேரில் சந்திக்கவோ, ஆறுதல் கூறவோ இல்லை. இதுகுறித்து அக்.3-ம் தேதி உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, அக்.3, 4-ம் தேதிகளில் தவெக நிர்வாகிகள் உயிரிழந்தர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்து அக்.6, 7-ம் தேதிகளில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் உயிரிழந்தவர்கள் குடும்பங்களை சந்தித்து, வீடியோ கால் மூலம் விஜயை அவர்களுடன் பேசி ஆறுதல் கூற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT