Last Updated : 14 Oct, 2025 01:16 PM

1  

Published : 14 Oct 2025 01:16 PM
Last Updated : 14 Oct 2025 01:16 PM

நயினார் நாகேந்திரன் பிரச்சார பயணத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம்!

மதுரை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டுள்ள தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண பாடல் மற்றும் குறும்படத்தில் அதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு முக்கியத் துவம் தரப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை மதுரையில் நேற்று முன்தினம் தொடங்கினார்.

பாஜக தலைவர்கள் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத் தாலும் திராவிட கட்சித் தலைவர்களிடம் இருந்து விலகியே இருப்பார்கள். பாஜக மற்றும் இந்து இயக்கங்களை சேர்ந்த தலைவர்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிப்பர். நயினார் நாகேந்திரன் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்.

அதிமுகவில் இருந்து அவர் பாஜகவில் இணைந்தவர். அதிமுக - பாஜக கூட்டணிக்காகவே தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். நயினார் தலைவரானதில் இருந்து பாஜக கூட்டங்களில் அதிமுக தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கூட்டங்களில் பேசும்போதும் எம்ஜிஆர், ஜெயலலிதாவை குறிப்பிட்டு பேசுவதை நயினார் வழக்கமாக கொண்டுள்ளார்.

அதிமுக தலைவர்கள் படங்கள்: மதுரையில் நேற்று முன்தினம் நடந்த பிரச்சாரப் பயணத் தொடக்க விழாவிலும் அதிமுகவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மேடையில் வைத்திருந்த பேனரில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் பெரிய அளவிலும், பழனிசாமி படம் சிறிய அளவிலும் இடம் பெற்றிருந்தன.

சுற்றுப்பயணம் செல்லும் நயினாரை வாழ்த்தி, ‘வாராரு, வாராரு நம்ம தலைவரு, தோளோடு தோளோடு எப்போதும் நிப்பாரு’ என்ற பாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பாடலில் திமுக, காங்கிரஸ் மீதான பிரதமர் மோடியின் விமர்சன பேச்சும், திமுகவின் குடும்ப ஆட்சி தொடர்பாக பொதுக்கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா பேசிய பேச்சும் ஒலிக்க விடப்பட்டுள்ளது.

குறும்படம் ஒன்றும் வெளியிடப் பட்டது. ‘பாரதத்தின் விடுதலைக்காக..’ எனத் தொடங்கும் அந்த குறும் படத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம், தூத்துக்குடி விஏஓ கொலை, தூய்மைப் பணியாளர் கைது, மடப்புரம் அஜித்குமார் காவல் மரணம், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கின் குற்றவாளி ஞானசேகரன், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்கள் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பேச்சுகளுடன் கருணாநிதியை விமர்சித்து எம்ஜிஆர் பேசிய வீடியோவும் இடம்பெற்றுள்ளது.

கூட்டணி கட்சியினர் பங்கேற்பு: சுற்றுப்பயண தொடக்க விழாவில் பாஜகவின் கூட்டணி கட்சிகளான அதிமுக, பார்வர்டு பிளாக், ஐஜேகே, தமாகா உள்ளிட்ட கட்சியினர் தங்கள் கட்சிக் கொடிகளுடன் பங்கேற்றனர். அதி முகவினர் அதிகளவில் பங்கேற்றனர். அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்எல்ஏக்கள் ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான் பங்கேற்றனர். இவர்கள் பேசும்போது, பழைய பாசத்தில் நயினாரை ‘பண்ணையார்’ எனப் புகழ்ந்தனர். அவர் அதிமுகவில் இருந்து வந்தவர் என்பதை பெருமையாக குறிப்பிட்டனர்.

குறிப்பாக உதயகுமார் பேசும் போது, அதிமுக ஆட்சியில் தொழில் துறை அமைச்சராக இருந்த நயினார் நாகேந்திரன் எடுத்த நடவடிக்கை யால்தான் தமிழகம் இன்று தொழில் துறையில் முன்னேறியுள்ளது எனக் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில், நயினார் நாகேந்திரன் எம்ஜிஆர் பாடலை பாடினார்.

ஜெயலலிதாவை பற்றி புகழ்ந்து பேசினார். தொடர்ந்து அவர் பேசும் போது, ‘தமிழகத்திலிருந்து திமுகவை விரட்ட இபிஎஸ் முன்னுரை எழுதியுள்ளார். நான் முடிவுரை எழுதுவேன்’ எனக் குறிப்பிட்டார். மேலும், ‘திமுகவை தோற்கடிக்க எல்லா கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இது புரிய வேண்டி யவர்களுக்கு புரியும்’ என டிடிவி.தினகரன், ஓபிஎஸ் ஆகியோருக்கு கூட்டணியில் சேருமாறு மறைமுகமாக அழைப்பு விடுத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x