Published : 13 Oct 2025 08:34 PM
Last Updated : 13 Oct 2025 08:34 PM
காரைக்குடி: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உச்ச நீதிமன்றமே தமிழக அரசை தலையில் கொட்டு வைத்துள்ளது என நயினார் நாகேந்திரன் பேசினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று இரவு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மருதுபாண்டியரின் ஜம்பு பிரகடனம் போன்று திமுக ஆட்சியை விரட்டி, பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க காரைக்குடியில் பிரகடனம் எடுப்போம்.
திமுக ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்பட்டு விட்டன. காரைக்குடி நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ மாவட்டத் தலைவர் அனுமதி கேட்டார். ஆனால் காவல் துறை அனுமதி தரவில்லை. இதுகுறித்து ஒரு போலீஸ் உயரதிகாரியை தொடர்பு கொண்டேன். அவர் அழைப்பை ஏற்கவில்லை.
திமுக ஆட்சியை நம்பி போலீஸ் அதிகாரிகள் தங்களது செயல்பாட்டை குறைத்து கொள்ள வேண்டாம். நியாயமான முறையில் நடக்கவில்லை என்றால் ஆட்சி மாற்றம் வந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வர் நிகழ்ச்சிக்கு கேட்ட இடத்தில் அனுமதி கிடைக்கிறது. ஆனால் எதிர்கட்சிகள் கேட்ட இடத்தில் அனுமதி தருவதில்லை. அனுமதி மறுக்கப்பட்டதால் தான் கரூரில் 41 பேர் உயிரிழந்தார். மேலும், தமிழக அரசின் விசாரணை நியாயமாக இருக்காது. அதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் தமிழக அரசை தலையில் கொட்டு வைத்துள்ளது.
உயர் நீதிமன்றம் மீதும் கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடி சம்பவம் குறித்து விசாரித்த அதே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையத்தை கரூர் சம்பத்துக்கும் அமைத்துள்ளனர். தூத்துக்குடி சம்பவம் விசாரணையே என்ன ஆனது என்று தெரியவில்லை.
கரூர் சம்பவம் குறித்து ஆட்சியர், எஸ்பியிடம் தலைமை செயலாளர் விவரம் கேட்கும் முன்பே ஆணையத்தை அமைத்துவிட்டனர். நாங்கள் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை செய்ய வேண்டும் என்று கேட்டோம். தற்போது உச்ச நீதிமன்றம் மூலமே நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது.
கரூர் சம்பவத்துக்கு காரணமானோர் விரைவில் சிறைக்கு செல்வர். தேசிய ஜனநாயக கூட்டணி இயற்கையான, நேசமான கூட்டணி, எம்ஜிஆர் ஆசிர்வாதத்தோடு அமைந்த கூட்டணி. சிவகங்கை மாவட்டத்துக்கு பிரதமர் பிரச்சாரத்துக்கு வர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் கருப்புமுருகானந்தம், மாவட்டத் தலைவர் பாண்டித்துரை, அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, நயினார் நாகேந்திரனுக்கு பிள்ளையார்பட்டியில் மாவட்டத் தலைவர் பாண்டித்துரை தலைமையில் அக்கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT