Published : 13 Oct 2025 05:40 AM
Last Updated : 13 Oct 2025 05:40 AM
சேலம்: அதிமுக கூட்டத்தில், தவெகவினர் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர். இதை மற்ற கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு பெரிய சோரகை கிராமத்தில் சென்றாயப் பெருமாள் கோயில், சூரப்பள்ளி அருகே காளியம்மன் கோயில் ஆகியவற்றில் பழனிசாமி வழிபட்டார்.
பின்னர், மேட்டூர் உபரி நீர் திட்டத்தில் நீர் நிரம்பியுள்ள வைரவன் ஏரி, வாத்திப்பட்டி ஏரி ஆகியவற்றை அவர் பார்வையிட்டு, ஏரி நீரில் மலர்களை தூவி வணங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: அதிமுக ஆட்சியில் மேட்டூர் உபரிநீர் திட்டம் ரூ.565 கோடியில் எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய 4 தொகுதிகளில் 100 ஏரிகள் பயனடையும் வகையில் கொண்டு வரப்பட்டது.
திட்டம் தொடங்கியதும், 6 ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டது. இதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், 100 ஏரி திட்டத்தில் இதுவரை 59 ஏரிகளுக்கு மட்டுமே மேட்டூர் உபரிநீர் வந்துள்ளது. அதிமுகவுக்கு பெயர் கிடைத்து விடக்கூடாது என திமுக அரசு இத்திட்டத்தை திட்டமிட்டு முடக்கி விட்டது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றும்.
அதிமுக கூட்டத்தில், பங்கேற்க கட்சித் தலைமையிடம் அனுமதி பெற்று வருமாறு, தவெகவினரிடம் எங்களது மாவட்ட செயலாளர்கள் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர். இதை மாற்று கட்சியினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. திமுக கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன. அந்த கட்சித் தலைவர்களுக்கு எங்களைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. எங்களுடன் கூட்டணி சேரக்கூடிய கட்சிகளுடன் நாங்கள் பேசி வருகிறோம்.
அதைப்பற்றி இவர்கள் ஏன் விமர்சனம் வைக்க வேண்டும். தவெக கூட்டணிக்கு வந்தால், பாஜகவை அதிமுக கழற்றிவிடும் என்று டிடிவி தினகரன் கூறியது குறித்து கேட்கிறீர்கள். அவருடைய கருத்தையெல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லை என்றார். தொடர்ந்து, அதிமுக- தவெக கூட்டணி உறுதியாகுமா, விஜய்யுடன் தொலைபேசியில் பேசினீர்களா என செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த பழனிசாமி, இந்த கூட்டணி வருமா, அந்தக் கூட்டணி வருமா என்பது தேர்தல் நேரத்தில்தான் உறுதியாகும். கரூர் சம்பவம் நடந்தவுடன் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினோம். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினோம், அவ்வளவு தான் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT