Published : 12 Oct 2025 09:37 AM
Last Updated : 12 Oct 2025 09:37 AM
2016-ல் புதுச்சேரியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், 2021 தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்றது. அதனால் கொஞ்சம் தளர்ந்து போன அந்தக் கட்சி, 2024 மக்களவைத் தேர்தலில் சுதாரித்துக் கொண்டு புதுச்சேரியைக் கைப்பற்றியது. இந்த நிலையில், 2026-ல் அதிகமான தொகுதிகளில் போட்டியிட்டு தங்கள் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் புதுச்சேரி காங்கிரஸார் மத்தியில் இப்போது மேலோங்கி வருகிறது.
அதேசமயம், தற்போது அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக, இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் கால் நூற்றாண்டுக்குப் பிறகு ஆட்சிக் கட்டிலை மீண்டும் நமக்கு சாத்தியப்படுத்தி விடலாம் என திட்டமிடுகிறது. இதற்காக தொகுதி வாரியாக செல்வாக்கான தலைகளை தேடிப்பிடித்து கட்சியில் சேர்த்துவருகிறார்கள். தேர்தல் பணிகளையும் காங்கிரஸுக்காக காத்திருக்காமல் முன்கூட்டியே தொடங்கி விட்டனர்.
ஜெகத்ரட்சகன் எம்.பி.யை புதுச்சேரிக்கான தேர்தல் பொறுப்பாளராக அனுப்பி வைத்திருக்கிறது திமுக தலைமை.புதுச்சேரிக்கு ஏற்கெனவே பழக்கமானவரான ஜெகத்ரட்சகன், தனது கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் ஸ்தாபனங்களை புதுச்சேரியில் நடத்தி வருகிறார். இதற்கு முன்பே அவர் புதுச்சேரி அரசியலில் அவதாரமெடுக்க ஒரு முயற்சி எடுத்தார். 2014 மக்களவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிட்டு தோற்ற சமயத்தில் புதுச்சேரி வழியாக மாநிலங்களவைக்குச் செல்ல முயற்சி எடுத்தார். அப்போது அந்த முயற்சி பலிக்காமல் போனாலும் புதுச்சேரி மீது கண்வைத்தபடியே இருந்தார். அவரைத்தான் இப்போது தேர்தல் பணிகளைக் கவனிக்க புதுச்சேரிக்கு அனுப்பி இருக்கிறது திமுக தலைமை.
திமுகவின் இந்த வேகம், காங்கிரஸாரையும் சுறுசுறுப்பாக்கி இருக்கிறது. அதனால், இம்முறை கூட்டணியில் அதிக தொகுதிகளை பெறவேண்டும்; இல்லாவிட்டால் தனித்துப் போட்டியிட வேண்டும்” என்று அவர்கள் பேச ஆரம்பித்திருக் கிறார்கள். இக்கருத்தை வலியுறுத்தி கடந்த மாதமே இரண்டாம் கட்டத் தலைவர்கள் ராகுல் காந்திக்கு கடிதமும் எழுதி இருக்கிறார்கள்.
இதுபற்றி பேசிய புதுச்சேரி காங்கிரஸார், "வரும் தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஜெகத்ரட்சகனுக்கு இணையாக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமாரை கொண்டு வர பேசி வருகிறோம். இதுபற்றி மேலிடத்திலும் பேசி வருகின்றனர்” என்றனர். ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியை எதிர்ப்பதைக் காட்டிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணியை ஒருமுகப்படுத்துவதே அந்தக் கட்சிகளின் தலைவர்களுக்கு இம்முறை பெரும் தலைவலியாக இருக்கும் போலிருக்கிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT