Published : 12 Oct 2025 08:33 AM
Last Updated : 12 Oct 2025 08:33 AM
கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சொல்லி இருக்கும் நிலையில் திமுக, அதிமுக என இரண்டு தரப்பிலிருந்தும் தேமுதிகவுக்கு அழைப்புகள் பறந்த வண்ணம் இருக்கின்றன.
பிரேமலதாவின் தாயார் இறந்த செய்தி கேட்டதுமே தருமபுரியில் இருந்து பிரேமலதாவும் சுதீஷும் திரும்பி வருவதற்கு முன்னரே, கிளம்பிப் போய் அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பினார் முதல்வர் ஸ்டாலின். மறுநாள் காலையில் எடப்பாடி பழனிசாமியும் சென்று அஞ்சலி செலுத்தினார். அடுத்ததாக அண்ணாமலையும் பிரேமலதாவின் வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்தார். இது எல்லாமே வழக்கமான மரபுதான் என்றாலும், இதன் பின்னாலும் அரசியல் கணக்குகள் இருக்கின்றன.
அதிமுக கூட்டணியுடன் தவெகவும் சேர்ந்துவிட்டால் அது பலமான கூட்டணியாக மாறிவிடும். அதைச் சமாளிக்க வேண்டுமானால் இன்னும் சில கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என நினைக்கிறது திமுக. அந்த வகையில் தேமுதிகவையும், ராமதாஸையும் கணக்கில் வைத்திருக்கிறது. அதேபோல் ஒன்றுபட்ட பாமகவுக்கும், தேமுதிகவுக்கும் அன்பு வலை வீசுகிறது அதிமுக.
ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுக கடைசி நேரத்தில் தங்களுக்குக் கைவிரித்ததால் அந்தக் கூட்டணியை விட்டு வெளியேறிய பிரேமலதா, திமுகவுடன் இணக்கமாகச் செல்ல ஆரம்பித்தார். முதல்வரை நலம் விசாரிக்கும் சாக்கில் அவரை இல்லம் தேடிச் சென்று சந்தித்துப் பேசினார். இதையெல்லாம் வைத்து திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கலாம் என்ற செய்திகள் வந்தன. ஆனால், தனது அண்மைப் பிரச்சாரத்தில்,தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து தங்களுக்கு திமுகவும் அதிமுகவும் சமதூரம் தான் என்று காட்டிக் கொண்டிருக்கிறார் பிரேமலதா.
கரூர் சம்பவத்தை முன்வைத்து தவெகவை தங்களோடு சேர்த்துக் கொள்ள அதிமுக மெனக்கிடுகிறது. ஒருவேளை, அப்படி நடந்து விட்டால் அதிமுக கூட்டணி பலமானதாகிவிடும் என்பதால் இப்போது மெல்ல அதிமுக சைடிலும் கதவைத் திறந்து வைக்கிறது தேமுதிக. அதனால் தான் அரசுக்கு எதிராக திடீர் தாக்குதல் தொடுத்திருக்கிறார் பிரேமலதா என்கிறார்கள். இருந்த போதும் அதையெல்லாம் பெரிதுபடுத்திக் கொள்ளாமல், விமர்சனம் செய்த மறுநாளே பிரேமலதாவின் தயார் இறப்புக்கு அஞ்சலி செலுத்தச் சென்றுவிட்டார் ஸ்டாலின்.
தேமுதிகவுக்கு அங்கீகாரத்தைப் பெறுவதற்கு இம்முறை குறைந்தது 8 எம்எல்ஏக்களை அந்தக் கட்சி பெறவேண்டும். அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் குறைந்தது 10 தொகுதிகளாவது நமக்கு நிச்சயம் கிடைக்கும் என கணக்குப் போடும் பிரேமலதா, விஜய்யும் வந்தால் மட்டுமே அதிமுக கூட்டணிக்குச் செல்ல வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறார்.
அப்படி இல்லாத பட்சத்தில் திமுக கூட்டணியில் இடம்பிடித்து தனக்கானதைக் கேட்டுப் பெறலாம் என நினைக்கிறார். ஆக எது வெற்றிக் கூட்டணியோ அதில் இணைவது என்பது தான் பிரேமலதாவின் திடமான முடிவு. அதனால் தான் வெற்றிக் கூட்டணிகள் முடிவாகும் வரை காத்திருப்போம் என தனது முடிவை ஜனவரிக்கு ஒத்திவைத்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT