Published : 11 Oct 2025 07:47 PM
Last Updated : 11 Oct 2025 07:47 PM
சென்னை: ‘திருமாவளவனின் சந்தேகம் நியாயமானது. திருமாவளவன் சென்ற கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல் துறை விசாரணையை வேகப்படுத்த வேண்டும்’ என மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
கடந்த 7-ஆம் தேதி சென்னை உயர் நீதின்றம் அருகே ஓர் ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று திரும்பியபோது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் ஒன்று திருமாவளவன் சென்ற காருக்கு குறுக்கே வந்துள்ளது. அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற நபர், அவரது வாகனத்தை நிறுத்திவிட்டு தகாராறு செய்யவே, இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்து திருமாவளவன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உயர் நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் 7 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்ட சதி' என்பது தெரியவருகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில்உள்ளனர் என்றும் எமது விசாரணையில் உறுதிபட தெரிகிறது.
எனவே, தமிழ்நாடு அரசு இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும். பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும். அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைகாட்சிகளைச் சார்ந்தவர்களையும் முழுமையாக அய்யமற விசாரித்திடவேண்டுமென கோருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார்.
திருமாவளவனின் பதிவை பகிர்ந்த இயக்குநர் பா.ரஞ்சித், ‘உயர் நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் 7 அன்று
காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார், இதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு அவருக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்தார்
இயக்குநர் ரஞ்சித்தின் பதிவை பகிர்ந்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும். மாநிலங்களை எம்.பி.யுமான கமல்ஹாசன், ‘தம்பி திருமாவின் சந்தேகம் நியாயமானது. இன்னொரு தம்பி பா.ரஞ்சித்தின் அக்கறை உண்மையானது. தம்பி திருமாவளவன் சென்ற கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல் துறை விசாரணையை வேகப்படுத்த வேண்டும். அவரது பாதுகாப்பை அதிகரிக்க தமிழ்நாடு அரசு ஆவன செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT