Published : 11 Oct 2025 05:07 PM 
 Last Updated : 11 Oct 2025 05:07 PM
மதுரை: “எங்க கட்சிக்காரங்க எங்க கட்சிக் கொடியவே தூக்கமாட்டாங்க, இதுல அடுத்தக் கட்சி கொடிய கொண்டுபோய் தூக்குவாங்களா? டிவிகே தொண்டர்கள் தன்னெழுச்சியாகவே பழனிசாமியை விரும்புகிறார்கள்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விளாங்குடி பகுதியில் புதிதாக கட்டமைக்கப்பட்ட நியாய விலை கடை மற்றும் அங்கன்வாடி மையத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “எங்கள் பொதுச் செயலாளர் பழனிசாமி பிரச்சாரக் கூட்டத்தில் டிவிகே கொடியை காட்டுகிறார்கள்.
மற்ற அரசியல் கட்சித் தலைவர்களெல்லாம் அமைதியாக இருந்தபோது விஜய்க்காக முதல் குரல் கொடுத்தது எடப்பாடி பழனிசாமிதான். அந்த பாசத்துல, அந்த கட்சித் தொண்டர்கள் ‘எங்களுக்காக குரல் கொடுத்து எங்கள் சூழலை எடுத்துச் சொன்னவர் பழனிசாமிதான்’’ என்று அவரது கூட்டத்திற்கு வந்து அவரை வரவேற்று கொடியை காட்டினோம் என டிவிகே தொண்டர்களே கூறுகிறார்கள். டிவிகே தொண்டர்கள் தன்னெழுச்சியாகவே பழனிசாமியை விரும்புகிறார்கள்.
தனக்கு ஒரு பழம் கிடைக்கவில்லை என்றால், அந்த பழம் புளிக்கும் என சொல்வார்கள். அதுபோலதான் விஜய்யின் ஆதரவு கிடைக்காததால் டிடிவி தினகரன், அதிமுகவை விமர்சிக்கிறார். தவெக கொடியை எடுத்துச் சென்று அதிமுகவினரே காட்டியதாக சொல்கிறார்கள். அந்தளவுக்கு தரம் தாழ்ந்து போகக் கூடிய கட்சி, எங்கள் கட்சி கிடையாது. எங்க கட்சிக்காரங்க எங்க கட்சிக் கொடியவே தூக்கமாட்டாங்க, இதுல அடுத்த கட்சி கொடிய பிடித்து ஆட்டுவோமா?
சில இடங்களில் ஜெயலலிதாவே எங்ககிட்ட சொல்வாங்க, ஏம்பா நம்ம ஆளுங்க கொடியவே தூக்கமாட்டேன்கிறாங்க, பூரா கொடியும் கூட்டணிக் கட்சி கொடியா இருக்குனு வருத்தப்படுவாங்க. அதிமுகவின் தொண்டர்கள் எவனாவது அடுத்த கட்சியின் கொடியை தூக்கியதாக வரலாறு உள்ளதா? கூட்டணி சேர்ந்தால் தோள் கொடுப்போம், தோளில் தூக்கி கொண்டாடுவோம். எங்கள் தலைவர்கள் யாரை சாமி என்று சொல்கிறார்களே அவர்களை சாமி என்று கும்பிடுவோம். சாணி என்றால் சாணியாகதான் நினைப்போம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT