Published : 11 Oct 2025 02:55 PM
Last Updated : 11 Oct 2025 02:55 PM
திருச்சி: சென்னையில் நடைபெற்ற விபத்தில் அண்ணாமலைக்கு தொடர்புள்ளதாக திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இவர்களது குடும்பத்திற்கு விசிக சார்பில் ரூ.50,000 நிதி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விசிக தலைவர் திருமாவளவன் சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார்.
அப்போது திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டாலும், அண்ணாமலை தான் தான் தலைவர் என்ற மனநிலையில் பேசுகிறார்.
சென்னையில் எனது கார் மீது ஸ்கூட்டர் மோதியது குறித்து முந்திக்கொண்டு அண்ணாமலை விமர்சனம் செய்தது உள்நோக்கம் கொண்டது. ஸ்கூட்டர் மீது எனது வண்டி மோதியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து வெளியிட்டவருக்கும் அண்ணாமலைக்கும் ஏதோ தொடர்பு உள்ளது. அண்ணாமலைக்கு மட்டும் உடனடியாக செய்தி எப்படி தெரிகிறது.
விசாரித்த வகையில் இதற்கு பின்னால் பாஜக உள்ளது. இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
இதில் ஆர்எஸ்எஸ், பாஜக, சாதி அமைப்புகள் இறங்கி வேலை செய்கிறார்கள். சமூக பதட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக தனியார் தொலைக்காட்சி தவறான செய்தி வெளியிட்டு அண்ணாமலைக்கு உதவி செய்கிறது.
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் எதன் அடிப்படையில் சிபிஐ விசரணை கேட்கிறார்கள் என தெரியவில்லை. கரூர் சம்பவம் நெரிசலால் ஏற்பட்டதல்ல. வேறு யாரோ தூண்டுதலின் பேரில் நடந்ததாக அவர்கள் கருதுகிறார்கள். அதனால் தான் அவர்கள் திசை திரும்ப பார்க்கிறார்களோ என்ற விமர்சனமும் எழுகிறது.
நெரிசல் பிறரால் தூண்டப்பட்டு நடத்துவது அல்ல. தன்னார்வத்தோடு வரக்கூடிய தொண்டர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் அதிகரிக்கும்போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கரூர் சம்பவத்தில் இல்லாத, பொல்லாத கட்டுக்கதைகளை சொல்வதே பாஜகவின் வாடிக்கை. கற்பனையாகவும், ஊகமாகவும் பல செய்திகளை பரப்புகிறார்கள். சமூக பதட்டத்தை ஏற்படுத்துவதில் குறியாக உள்ளனர்.
மக்கள் செல்வாக்கோடு இருக்கக்கூடிய சூழலில் விஜய் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் என்ன நிலவுகிறது என்பதை அண்ணாமலை விளக்க வேண்டும். கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்க்கு நிறைய படிப்பினைகளை கிடைத்திருக்கிறது. தொண்டர்கள், நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்க வரவேண்டாம் என கேரிக்கை வைப்பதில் தவறில்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்,
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT