Published : 11 Oct 2025 12:07 PM
Last Updated : 11 Oct 2025 12:07 PM
திருச்சி: பாஜகவை கழற்றிவிட அதிமுக தயாராகிவிட்டதா என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், விசிக - தவெக கூட்டணி அமையுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த திருமாவளவன் கூறியதாவது: தவெகவுடன் விசிக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி. அதிமுக கூட்டங்களில் தான் தவெக கொடிகளைக் காண முடிகிறது. அப்படியென்றால் தவெகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக உடன்பட்டுள்ளதா?. தவெக தலைவர் விஜய் பல மேடைகளில், பாஜக எங்கள் கொள்கை எதிரி என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கிறது என்றால் பாஜகவை கழற்றிவிட தயாராகிவிட்டது. பாஜகவை கழற்றிவிடும் பட்சத்தில் கூட்டணி அமைப்பதில் அதிமுக நம்பகத்தன்மையற்ற கட்சியாக மாறிவிடாதா?. இவ்வாறு திருமாவளவன் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.
கரூர் சம்பவத்தை முன்வைத்து விஜய் கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்கும் என இப்போது பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த இபிஎஸ்ஸுக்கு தவெகவினர் கட்சிக் கொடிகள் சகிதம் வந்து வரவேற்பு கொடுத்தார்கள். தருமபுரி தொகுதியில் விஜய் படத்தை போட்டு பழனிசாமிக்கு ஃபிளெக்ஸ் வைத்திருந்தார்கள். விஜய்யை இபிஎஸ் போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக வரும் செய்திகளையும் இருதரப்பிலும் மறுப்பார் இல்லை.
இப்படி, கரூர் சம்பவத்தில் தங்களுக்கு ஆதரவாக நிற்கும் அதிமுகவுடன் இயல்பாகவே தவெக கூட்டணி அமையக் கூடிய சூழல் உருவாகி வரும் நிலையில், திருமாவளவனின் இந்த விமர்சனம் கவனம் பெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT