Published : 11 Oct 2025 08:46 AM
Last Updated : 11 Oct 2025 08:46 AM

“தமிழகத்தில் ஹிட்லர் ஆட்சி நடக்கிறது!” - பட்டாசு போல் வெடிக்கும் பாஜக கஸ்தூரி நேர்காணல்

சனாதன ஆதரவு, திமுக, விசிக மீதான விமர்சனம் என அதிரடியாக கருத்துகளைத் தெரிவித்து, அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் நடிகை கஸ்தூரி. தமிழக பாஜகவின் கலை, கலாச்சார பிரிவு நிர்வாகியாக உள்ள அவர் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பிரத்யேக பேட்டி இது.

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை, தவெக தலைவர் விஜய் சென்று பார்க்காததை கடுமையாக விமர்சித்து உள்ளீர்களே..?

அங்கு 41 பேர் உயிரிழந்த நிலையில், மக்கள் தலைவனாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர், என் உயிரே போனாலும் பரவாயில்லை என்று அங்கு இருந்திருக்க வேண்டாமா? நடிகை அம்பிகா முதல், யார் யாரோ அங்கு சென்று ஆறுதல் கூறியுள்ள நிலையில், இந்த நிமிடம் வரை விஜய் அங்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லவில்லையே என சாமானியர்களும் நினைக்கின்றனர். அதுவே என் ஆதங்கமாக வெளியானது.

விஜய் கரூருக்குச் சென்றால் அவரது உயிருக்கு ஆபத்து என்று உங்கள் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் சொல்கிறாரே..?

மத்திய, மாநில அளவிலான ‘சோர்ஸ்’ அடிப்படையில், மாநில தலைவர் அப்படிச் சொல்லியிருக்கலாம். அதை உதாசீனப்படுத்தி விட முடியாது. ஆனால், மக்களுக்கு தலைவனாக வர விரும்புகிறவர்கள் தனது உயிருக்கு பயப்படுவார்களா? ஒருவேளை, நாளை விஜய் முதல்வராகி விட்டால், இதைவிட பத்து மடங்கு பிரச்சினைகள் வருமே... அதை எப்படி எதிர்கொள்வார்? என்னைப் பொருத்தவரை விஜய்க்கு ஆலோசகர் வட்டம் சரியில்லை. எல்லா தொகுதிகளிலும் தான் தான் வேட்பாளர் என்று மாநாட்டில் விஜய் பேசும்போது கைதட்டி வரவேற்றோம். ஆனால் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால், அக்கட்சியில் விஜய்யை விட்டால் வேறு ஆளில்லை என்பது போல் தெரிகிறது.

அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய்யும் சேர வேண்டும் என விரும்புகிறீர்களா..?

அவர் கண்டிப்பாக கூட்டணியில் சேர வேண்டும். தனியாக செயல்பட இது சரியான காலகட்டம் இல்லை. அவர் கூட்டணியில் சேர்வது காலத்தின் கட்டாயம்.

கரூர் சம்பவத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் கண்ணீர் சிந்தியதற்கு, கலைமாமணி விருது கொடுக்க வேண்டும் என்று கிண்டல் செய்வது நியாயமா?

நான் மக்களின் குரலாகத்தான் ஒலித்தேன். எம்.பி.யான ஜோதிமணிக்கு ஒலிம்பிக் மெடலும், அமைச்சர் அன்பில் மகேஸுக்கு நடிப்புக்கான ஆஸ்கர் விருதும் கொடுக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் மீம்ஸ்கள் பறந்ததை நீங்கள் பார்க்கவில்லையா?

கரூரில் தவெக பிரச்சார கூட்டத்தில் நடந்தது விபத்து தானே..?

யாரும் எதிர்பாராத சம்பவம் அது. காலதாமதமாக வந்த விஜய், கட்டுப்பாடு இல்லாத ரசிகர்கள், காவல்துறை என அனைவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இனிமேலாவது விஜய் தனது ரசிகர்களை ஓரளவுக்காவது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அதோடு, இந்தச் சம்பவம் பற்றி யார் சந்தேகம் கிளப்பினாலும், அவர்களைத் தேடிச் சென்று கைது செய்யும்போதும் சந்தேகம் வலுப்படுகிறது.

கரூர் சம்பவத்தில் பொதுமக்களை கத்தியால் குத்தி காயப்படுத்தினர் என்பது போன்ற ஆதாரமில்லாத செய்திகளைப் பரப்பினால் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியுமா?

சந்தேகங்களை கேள்விகளாக வைக்கும் யூ-டியூபர்கள் மீது, பினாமிகளைக் கொண்டு புகார் கொடுக்க வைத்து வழக்குகள் பாய்கிறது. கைது நடவடிக்கை நடக்கிறது. தமிழகத்தில் ஹிட்லர் ஆட்சி நடக்கிறது. யூ-டியூபர்கள் பேசியதால் தான் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதா? அதற்கு முன்பு இங்கே முழு அமைதி நிலவியதா?

திமுகவுக்கும் உங்களுக்கும் என்னதான் பிரச்சினை? அடிக்கடி அவர்களை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறீர்களே..?

எனக்கும் திமுகவுக்கும் தனிப்பட்ட எந்த பிரச்சினையும் இல்லை. ஸ்டாலின் ஐயா உட்பட அனைவர் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால், மக்களுக்கு பிரச்சினைகள் வரும்போது கேள்வி எழுப்புகிறேன். அதில் பாகுபாடு பார்ப்பதில்லை.

இருந்தாலும், ‘திருமாவளவனுக்கு முதலாளி திமுக’ என்பதான விமர்சனங்கள் எல்லாம் கொஞ்சம் ஓவரில்லையா..?

வேங்கைவயல் சம்பவத்தில் வேண்டா வெறுப்பாக அரசியல் நிலைப்பாட்டை திருமாவளவன் எடுத்தார். தனது சமுதாயத்தில் நடக்கும் கொலைகளுக்கு கூட சமூக ரீதியான நிலைப்பாட்டை அவர் எடுக்கவில்லை. பணி நிரந்தரம் கோரி, தூய்மைப் பணியாளர் போராட்டம் நடத்தியபோது, “பணி நிரந்தரம் கேட்காதீர்கள்” என்று சொன்னதோடு, அதற்கு புது விளக்கமும் கொடுத்தார். இப்படி பல சம்பவங்களைச் சொல்லலாம். ஆக, முதலாளி என்று சொல்வதை விட ஒரு தலைவனாக ஸ்டாலினை அவர் ஏற்றுக்கொண்டு விட்டார்.

திருமாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவரது கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனரே..?

தமிழக காவல்துறை மீது விசிகவினருக்கு நம்பிக்கை இல்லையா? என்னைப் பொருத்தவரை திருமாவளவனுக்கு, போலீஸ் பாதுகாப்பை விட நல்ல ஓட்டுநர் தான் இப்போது தேவைப்படுகிறார்.

நாதக சார்பில் ஐந்து பிராமணர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என்ற அறிவிப்பை வரவேற்கிறீர்களா..?

மக்களுக்கான அரசியலை, எந்தவித சமரசமும் இல்லாமல் சீமான் செய்து வருகிறார். அவரது உழைப்புக்கு நான் மிகப்பெரிய அபிமானி. அவர், ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார். அந்த வகையில், பெரியாரியம் என்ற ஒரு தீய பிம்பத்தை தனியாக நின்று உடைக்கிறார். ஒரு சனாதனியாக இதை நான் வரவேற்கிறேன். அதேபோல் இந்த சமூகத்துக்காக பாடுபட்ட பிராமணர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு ஒதுக்கீடு கொடுத்தது வரவேற்கத்தக்கது.

பாஜகவில் இருந்து கொண்டு நாதகவை இவ்வளவு பாராட்டுகிறீர்களே… இதற்கு அந்தக் கட்சியிலேயே சேர்ந்து விடலாமே..?

நல்லது யார் செய்தாலும் அதை பாராட்டலாமே. அதோடு, நான் அரசியல் கருத்துகளை எடுத்துவைக்கத் தொடங்கியபோதே, எனக்கு சங்கி என்று திமுகவினர் முத்திரை குத்திவிட்டனர். எனவே, நான் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்தால் அவர்களுக்கு பின்னடைவுதான் ஏற்படும். மேலும், பெண்கள், குழந்தைகள் நலன் காக்க வேண்டும், சனாதனத்தை காக்க வேண்டும் என்ற எனது குறிக்கோள்களை தேசிய அளவில் நிறைவேற்ற பாஜகதான் சரியான தேர்வாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x