Published : 11 Oct 2025 09:00 AM 
 Last Updated : 11 Oct 2025 09:00 AM
தேசியக் கட்சிக்கு தமிழகத்தில் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட வடபுல தலைவர் அண்மையில் சென்னைக்கு விஜயம் செய்தார். கூட்டணி தலைகளை சந்தித்துப் பேசிய தலைவர், அப்படியே சொந்தக் கட்சியின் பூத் கமிட்டி புள்ளியையும் அழைத்து, “எலெக்ஷன் வேலை எல்லாம் எப்படிப் போயிட்டு இருக்கு?” என்று விசாரித்தாராம்.
அவருக்கு, என்னவெல்லாம் செய்திருக்கிறோம், என்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்று பவர் பாயின்ட்டில் செயல்விளக்கம் கொடுத்த பூத் கமிட்டி புள்ளி, அதற்கு முன்னதாக அந்த அறைக்குள் இருந்த கட்சியின் ‘பொன்னான’ தலைவரையும் ‘வில்’ தலைவரையும் “நீங்க எல்லாம் கொஞ்சம் வெளியில் இருங்க ப்ளீஸ்...” என்று சொல்லி வெளியே அனுப்பிவிட்டாராம். இந்த விவகாரம் இப்போது கட்சி வட்டாரத்தில் அனல் பறக்கும் விமர்சனமாக போய்க்கொண்டிருக்கிறது.
பூத் கமிட்டி புள்ளி திராவிட மாடலில் இருந்து தேசியக் கட்சிக்கு புலம் பெயர்ந்தவர். இவருக்கு அண்மையில் கட்சியில் முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்ட போதே, “கழக அமைச்சர்கள் மூன்று பேருக்கு பினாமியாக இருந்தவருக்கு எல்லாம் மாநிலப் பதவியா?” என சிலர் கிண்டலடித்தார்கள். இந்த நிலையில், இப்போது கட்சியின் சீனியர்களை தலைமையிடத்து தாசில்தார்கள் முன்னிலையில் உதாசீனம் செய்திருப்பதை அடுத்து, “ரகசியத்தை விற்பவரே எப்படி ரகசியம் காப்பாராம்?” என்று ‘கமிட்டி’ பார்ட்டி குறித்து கமென்ட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT