Published : 11 Oct 2025 08:54 AM
Last Updated : 11 Oct 2025 08:54 AM

‘அவர் அரசியல்வாதி போல் பேசி இருக்கிறார்!’ - நீதிபதியை அதிரடியாய் விமர்சித்த அழகிரி

கரூர் சம்பவத்தை வைத்து விஜய்யை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர அதிமுக பகீரத பிரயத்தனம் செய்கிறது. அதேசமயம், விஜய்யை சாக்காக வைத்து கூட்டணி தலைமையான திமுகவை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மறைமுகமாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதன் உச்சமாக, விஜய்க்கு வக்காலத்து வாங்குவதாக நினைத்துக் கொண்டு, கரூர் சம்பவத்தில் விஜய்யை சாடிய நீதிபதியை வம்புக்கு இழுத்திருக்கிறார் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி.

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோவை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார், “கரூர் நிகழ்வு மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு. இதையெல்லாம் கண்களை மூடிக்கொண்டு நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது. 41 பேர் உயிரிழந்த நிலையில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டுவிட்டு தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓடியுள்ளனர். அவர்களுக்கு தலைமைப் பண்பு இல்லை. இச்சம்பவத்துக்கு அவர்கள் பொறுப்பேற்காதது கண்டனத்துக்குரியது” என கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார்.

இதுதொடர்பாக, வாக்குத் திருட்டுக்கு எதிராக விழுப்புரத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயன்றுள்ளார். தலைமை நீதிபதி நினைத்திருந்தால், இச்சம்பவத்தை பூதாகரமாக கொண்டு சென்றிருக்கலாம். அவர் கோபப்பட்டுவிடுவார் என்று தான் நான்கூட நினைத்தேன். ஆனால் அவர், அற்புதமாக நடந்து கொண்டார். நெருக்கடி நேரத்தில், தலைமை பொறுப்பில் உள்ளவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணம் தலைமை நீதிபதி கவாய்.

அப்படியும் ஒரு நீதிபதி இருக்கிறார். சென்னையிலும் விஜய் வழக்கை விசாரித்த ஒரு நீதிபதி இருக்கிறார். அவரது தீர்ப்பை நான் விமர்சிக்கவில்லை. ஆனால், அவர் ஒரு அரசியல்வாதி போல் பேசி இருக்கிறார். இப்படியா ஒரு நீதிபதி விமர்சனம் செய்வது? நீங்கள் ஒரு கட்சி தலைவரைப் போல் பேசியிருக்கிறீர்கள்” என்று விஜய்க்கு வக்காலத்து வாங்குவதாக நினைத்து நீதிபதியை விமர்சித்தார்.

இது குறித்து நம்மிடம் பேசிய அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஏ.சங்கரன், “கரூர் சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்றமும் அதன் மதுரை கிளையும் சரியாகவே நடந்து கொண்டுள்ளது. அப்படி இருக்க, நீதிபதி குறித்து கே.எஸ்.அழகிரி கூறிய கருத்துகள் தவறானது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச முயன்ற சம்பவமானது தனி நபர் மீதான தாக்குதலாகும். அதனால் அவர் மன்னித்துவிட்டார்.

ஆனால், கரூர் துயரச் சம்பவத்தை அப்படி பார்க்க முடியாது. கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிர்கள் பறிபோய் இருக்கிறது. அதை மனதில் கொண்டுதான் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். தீர்ப்பை விமர்சிக்கவில்லை எனக் கூறி நீதிபதியை விமர்சித்துள்ளார் கே.எஸ்.அழகிரி. ஆனால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சரியாகத்தான் செயல்பட்டுள்ளார். அது புரியாமல் நீதிபதியை விமர்சித்த அழகிரிக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x