Last Updated : 10 Oct, 2025 09:16 PM

 

Published : 10 Oct 2025 09:16 PM
Last Updated : 10 Oct 2025 09:16 PM

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்துள்ளது. மேலும், சிக்கந்தர் மலை என அழைக்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கக் கோரி இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைக் கண்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். திருப்பரங்குன்றம் மலையில் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தடை விதிக்கக் கோரி இந்து மக்கள் கட்சியின் அகில பாரத அனுமன் சேனை நிர்வாகி ராமலிங்கம், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைக்கவும், மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கவும் கோரி இந்து மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் பரமசிவம் ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர்.

இதேபோல் சிக்கந்தர் தர்கா பகுதியில் பாராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி கோரி சிக்கந்தர் தர்காவின் முதுநிலை மேலாண்மை அறங்காவலர் ஒசிர்கானும், சிக்கந்தர் தர்காவுக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக சாலை, விளக்கு, குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்தக் கோரி அப்துல் ஜப்பார் என்பவரும் மனுத் தாக்கல் செய்தனர். மேலும், திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்கக் கோரி சுவஸ்தி ஸ்ரீ லெட்சுமிசேனா பட்டாச்சர்ய மகா சுவாமி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெ.நிஷா பாஷ, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் அடங்கி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஜெ.நிஷாபானு, 6 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிபதி ஸ்ரீமதி, ‘திருப்பரங்குன்றம் மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும், சிக்கந்தர் மலை என்றோ சமணர் குன்று என்றோ அழைக்கக் கூடாது, தர்காவில் கந்தூரி விழா நடத்தி ஆடு, கோழிகளை பலியிடுவதற்கும், ரம்ஜான், பக்ரீத் நாட்களில் தொழுகை நடத்தும் உரிமைகளை நிலைநாட்ட உரிமையியல் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற வேண்டும். அதுவரை தொழுகை நடத்தக் கூடாது, ஆடு, கோழி பலியிடக் கூடாது’ எனக் கூறியிருந்தார்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் மனுக்கள் 3-வது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய மனுக்களை நீதிபதி ஆர்.விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ‘பழங்கால நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டப்படி இந்திய தொல்லியல் துறை 29.07.1908 மற்றும் 7.02.1923-ல் வெளியிட்ட அறிவிப்பில், திருப்பரங்குன்றம் மலையின் மேற்குச் சரிவில் உள்ள பஞ்ச பாண்டவர் படுகைகள் மற்றும் மலை உச்சியில் சிக்கந்தர் மசூதிக்குப் பின்னால் உள்ள படுகைகள் கொண்ட குகை ஆகியன பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக கூறப்பட்டுள்ளது.

இவ்விரண்டு அறிவிப்புகளிலும் மலை திருப்பரங்குன்றம் மலை என்றும், அதில் சிக்கந்தர் மசூதி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை எனக் கூறப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பிரிவி கவுன்சில் உத்தரவில் 170 ஏக்கர் திருப்பரங்குன்றம் மலையில் 33 சென்ட் நெல்லித்தோப்பு மற்றும் தர்கா தவிர மற்ற பகுதிகள் கோயிலுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்டுள்ளது.

மதுரை நகரில் சொந்தமாக வீடு வைத்திருப்பவர், அந்த வீட்டுக்கு அவர் விரும்பியபடி பெயரிட அவருக்கு சுதந்திரம் உண்டு. அதே நேரத்தில் முழு நகரத்தையும் அவர் தேர்ந்தெடுத்த பெயரில் அழைக்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. அதேபோல், திருப்பரங்குன்றம் மலை முழுவதும் தேவஸ்தானத்தின் சொத்தாக அறிவிக்கப்பட்டு, மலையின் ஒரு சிறிய பகுதியில் மட்டும் இஸ்லாமியர்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில், மொத்த மலையையும் தர்கா பெயரில் அழைக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது.

ஆடு, கோழி பலியிடும் விவகாரத்தில் நீதிபதி ஸ்ரீமதியின் உத்தரவில் உடன்படுகிறேன். திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தே இருந்து வருவதாக தர்கா நிர்வாகம் கூறுகிறது. அதே நேரத்தில் மனுதாரர்கள் தரப்பிலும், கோயில் நிர்வாகம் சார்பிலும் கடந்த காலத்தில் இதுபோன்ற நடைமுறை இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தையில் தர்கா சார்பில் பிராணிகள் பலியிடும் கோரிக்கைக்கு கோயில் நிர்வாகம் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய நீதிமன்றத்தை அணுகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற கந்தூரி விழாவில் பலியிடுதல் நடைபெறவில்லை என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினை காரணமாகவே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. பிராணிகள் பலியிடுதல் தொடர்பாக கூட்டம் நடைபெற வில்லை. இந்த விவகாரத்தில் உரிமையியல் நீதிமன்றத்தில் முடிவு காணப்படாதது வரை எந்த முடிவுக்கும் வர முடியாது.

மேலும் திருப்பரங்குன்றம் மலையில் 172.2 ஏக்கர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. தொல்லியல் சட்டப்படி பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள் அமைந்திருக்கும் பகுதியில் பிராணிகளை எந்த நோக்கத்துக்காகவும் கொண்டுச் செல்லக்கூடாது. அதன்படி அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து வேறு இடங்களில் அசைவ உணவு சமைப்பது, உட்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் அமைந்திருக்கும் பகுதியில் எல்லையை முடிவு செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு மத்திய தொல்லியல் துறை இரு முறை கடிதம் அனுப்பியுள்ளது. இருப்பினும் மாவட்ட நிர்வாகம் மத்திய தொல்லியல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

இதுபோன்ற சூழலில் தர்கா நிர்வாகம் சிக்கந்தர் தர்கா மற்றும் நெல்லித்தோப்பு பகுதியின் உரிமையாளராக கருதினாலும் பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் இடங்கள் மற்றும் எச்சங்கள் விதிகள் 1959-ன் படி தொல்லியல் துறையின் அனுமதியில்லாமல் பிராணிகள் பலியிடுவதற்கு அனுமதி வழங்க முடியாது. அவ்வாறு அனுமதி வழங்குவது தொல்லியல் சட்டத்தை மீறுவதாகும். இதன் அடிப்படையில் திருப்பரங்குன்றம் மலையின் மீது பிராணிகள் பலியிட தடை விதிக்கப்படுகிறது.

உரிமையியல் நீதிமன்ற உத்தரவுபடி நெல்லித்தோப்பு பகுதிக்கு செல்லும் படிக்கட்டுகள் கோயிலுக்கு சொந்தமானது. இந்த படிக்கட்டுகள் நெல்லித்தோப்பு பகுதியை கடந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்கிறது. திருவிழா காலங்களில் முருகன் கோயில் வேல் இந்த படிக்கட்டுகள் வழியாக காசி விஸ்வநாதர் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். இந்தப் படிக்கட்டுகள் முருகன் கோயில் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் பாரம்பரிய படிக்கட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளின் போது நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதிப்படலாம்” என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம் வழக்கில் 3 நீதிபதிகளில் 2 பேர் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு சமைக்கவும், பரிமாறவும் தடை விதித்தும், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று அறிவிக்கவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x