Published : 10 Oct 2025 08:55 PM
Last Updated : 10 Oct 2025 08:55 PM

“கூட்டணிக்காக தியாகங்கள் செய்வதற்கு முற்றுப்புள்ளி...” - காங். எம்.பி மாணிக்கம் தாகூர் கருத்து

சிவகாசி: ”கூட்டணி கட்சிகளுக்காக தொடர்ந்து பல தியாகங்களை செய்துள்ளதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகிப்பது குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டியில் அவசியம் எடுத்துரைப்பேன்" என சிவகாசியில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரித்துள்ளார்.

சிவகாசி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்த விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர், பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன்பின் சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் அஞ்சல் துறை சார்பில் நடைபெறும் மாவட்ட அளவிலான தபால் தலை கண்காட்சியை பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த அண்ணா திமுக தற்போது அமித் ஷா திமுகவாக சுருங்கிவிட்டது.

கூட்டத்தில் 4 பேர் பிற கட்சி கொடியை கொண்டு வந்தாலே கூட்டணி வந்துவிடும் என நினைக்கும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. பழனிச்சாமியின் கரங்களால் அதிமுகவுக்கு முடிவுரை எழுதப்படுகிறது. மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் அதிமுக தவறான கைகளுக்குள் சென்றுவிட்டது. இதனால் மக்கள் மத்தியில் அதிமுக நம்பகத்தன்மையை இழந்துள்ளது.

1996-ம் ஆண்டில் படு தோல்வியடைந்தபோது கூட 27 சதவீதமாக இருந்த அதிமுக வாக்கு வங்கி, கடந்த மக்களவை தேர்தலில் 21 சதவீதமாக குறைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்துவார். எவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்துவார் என தெரியவில்லை. விஜய் ரசிகர் மன்றம், அரசியல் கட்சியாக மாறியுள்ளதா என்பது வாக்குப் பெட்டியை திறந்து பார்த்தால்தான் தெரியும்.

இண்டியா கூட்டணிக்கு எதிராக தமிழகத்தில் ஒரு கட்சி உருவாகும். ஆனால், அது அதிமுக இல்லை என்பது தெரிகிறது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கூட்டணிக்காக பல தியாகங்களை செய்துள்ளது. எங்களது உரிமையை கோருவதற்கு சரியான நேரம் வந்துவிட்டது. கூட்டணி கட்சிகளுக்காக தொடர்ந்து பல தியாகங்களை செய்துள்ளதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகிப்பது குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டியில் அவசியம் எடுத்துரைப்பேன்” என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x