Published : 10 Oct 2025 05:08 PM
Last Updated : 10 Oct 2025 05:08 PM
சென்னை: கிட்னி திருட்டு வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது சட்டத்தை வளைக்கும் திமுகவின் முயற்சிக்கு சம்மட்டி அடி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாமக்கல் மாவட்ட சிறுநீரகத் திருட்டு குறித்து தென்மண்டலக் காவல்துறைத் தலைவர் தலைமையில் விசாரணை நடத்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த ஆணையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவே சிறுநீரகத் திருட்டு குறித்து விசாரணை நடத்தும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
கிட்னி திருட்டு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தென்மண்டலக் காவல்துறைத் தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில் நிஷா , சிலம்பரசன் , கார்த்திகேயன், அரவிந்த் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி ஆணையிட்டது. அக்குழு அதன் விசாரணையை முடித்து செப்டம்பர் 24 ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டிருந்த நிலையில் தான், அதற்கு 4 நாள்கள் முன்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.
மதுரை உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகளை ஏற்க முடியாது என்றும், அவர்களுக்கு பதிலாக தாங்கள் கூறும் அதிகாரிகளை சிறப்புப் புலனாய்வுக் குழுவில் சேர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது.
ஆனால், அதை ஏற்க மறுத்து விட்ட உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என்றும், உயர் நீதிமன்றம் அமைத்தக் குழுவே விசாரணையை நடத்தும் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. இது சட்டத்தையும், நீதியையும் வளைத்து சிறுநீரகத் திருட்டில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்ற தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிக்கு விழுந்த சம்மட்டி அடி ஆகும்.
மதுரை உயர் நீதிமன்றக் கிளையால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த 5 அதிகாரிகளும் தமிழ்நாட்டு பிரிவைச் சேர்ந்தவர்கள் தான். ஒரு மாநில அரசு அதன் சொந்த அதிகாரிகள் நடத்தும் விசாரணையையே எதிர்க்கிறது என்றால், அவர்கள் நடத்தும் விசாரணையில் உண்மை வெளியாகிவிடும்; அதனால் அவர்களுக்கு பதில் தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை வைத்து விசாரித்து குற்றவாளிகளைக் காப்பாற்றத் துடிக்கிறது என்பது தான் பொருள். சிறுநீரகத் திருட்டில் தொடர்புடையவர்களைக் காப்பாற்ற திமுக அரசு முயல்கிறது என்பதற்கு இது தான் சான்று ஆகும்.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், நீதியை நிலை நிறுத்த வேண்டும் என்பதைக் கடந்து, நீதியை பலி கொடுத்தாவது தங்களுக்கு வேண்டியவர்களை பாதுகாக்க வேண்டும் என்று திமுக அரசு துடிக்கிறது. அதற்காகத் தான் சிறுநீரகத் திருட்டு வழக்கில் உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அளித்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில் மட்டுமின்றி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கிலும் யாரையோ காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. அதிலும் திமுகவுக்கு தோல்வியே கிடைக்கும்.
திமுக அரசு மக்கள் நலனைக் காக்கும் அரசு அல்ல. சிறுநீரகத் திருட்டு, படுகொலைகள் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கும் அரசு என்பது உறுதியாகியிருக்கிறது. மக்கள் விரோத திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு தூக்கி எறியப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT