Published : 10 Oct 2025 02:31 PM
Last Updated : 10 Oct 2025 02:31 PM
புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வளாகங்களுக்குள் எழுந்திருக்கும் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் குறித்து நியாயமான விசாரணை கோரி மாணவர்கள் நடத்திய போராட்டம் நள்ளிரவில் தீவிரமடைந்த சூழலில், போலீஸாரால் எட்டி உதைத்து, தடியடி நடத்தப்பட்டு 10 மாணவ பிரதிநிதிகள் கைதானார்கள்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் ஏராளமான முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவிகள் பயின்று வரும் நிலையில், மாணவி ஒருவர் அழுதபடியே பேசும் ஆடியோ வெளியானது. அதில், துறை சார்ந்த பேராசிரியர் ஒருவர் அடிக்கடி ஆபாசமாகப் பேசுவதாகவும், வாட்ஸ்அப் மூலம் ஆபாச படங்களை அனுப்ப சொல்வதாகவும்,நிர்வாண புகைப்படங்களை அனுப்பாவிட்டால் இன்டெர்னல் மதிப்பெண்களை வழங்கமாட்டேன் என மிரட்டுவதாகவும் வேதனை தெரிவித்திருந்தார்.
மேலும் பெற்றோருக்குத் தெரிந்தால் படிப்பை நிறுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தில் உள்ளதாகவும் அவர் அழுதபடி அந்த ஆடியோவில் தெரிவித்திருந்தார். இதையடுத்து காரைக்காலை சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் ஆடியோ ஆதாராங்களுடன், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் பல்கலைக்கழகத்திலும் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் சில எழுந்தன. இச்சூழலில் பல்கலைக்கழக மானிய குழு 2015 விதிகள் படி பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டியை அமைத்திட வேண்டும். தற்போதுள்ள குழுவால் அதன் வளாகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கு "நீதி" வழங்க முடியவில்லை என்று உணர்ந்ததால், உள் புகார் குழுவை மறுசீரமைக்கக் கோரி மாணவ, மாணவிகள் போராட்டத்தைத் தொடங்கினர்.
பல்கலைக்கழக வளாகத்தில் கையில் கண்டன பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்று, துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரினர்.
தொடர்ந்து வியாழன் மாலை தொடங்கிய மாணவர்களின் போராட்டம் இரவிலும் தொடர்ந்தது. வியாழக்கிழமை இரவு பிரதான வளாகத்திற்குள் போராட்டம் வெடித்ததால், பதற்றமான சூழ்நிலையைத் தணிக்க போலீஸார் வரவழைக்கப்பட்டனர். துணைவேந்தர் அலுவலக கட்டடத்தை விட்டு அவர்கள் நகர மறுத்தனர். இச்சூழலில் மோசமாக நடத்தப்பட்டு பத்து மாணவ பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டனர். போலீஸார் அவர்களை அடித்து இழுத்து எட்டி உதைத்து வேனில் ஏற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வேனை மறித்து மற்ற மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். மாணவர்கள் வேனிலிருந்து இறங்காமல் போராட்டத்தை இன்றும் தொடர்கின்றனர். போராட்டத்தில் மாணவர்களை கையாண்டது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "போராட்டம் நடந்த நிர்வாகக் கட்டிடம் பகுதியில் நூறு மீட்டருக்கு எவ்வித போராட்டத்துக்கும் தடையை நீதிமன்றம் விதித்துள்ளது. மாணவர்கள் துணைவேந்தரை சிறைபிடிக்க முயன்றனர். அதை தடுத்து கைது செய்தோம்" என்றனர்.
போராட்டக்களத்தில் உள்ள மாணவ, மாணவிகளோ, "மாணவிகள் பாதிப்பு பிரச்சினை தொடர்பாக துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரை சந்திக்க முயற்சி செய்தோம். ஆனால் அது நடக்கவில்லை. போராட்டம் நடத்திய இடத்திலிருந்து இழுத்து செல்லப்பட்டதுடன் தாக்கப்பட்டோம், போலீஸார் எட்டி உதைத்தனர். மாணவிகள் பாதிப்பு உண்மை. போராட்டம் தொடரும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT