Published : 10 Oct 2025 01:11 PM
Last Updated : 10 Oct 2025 01:11 PM

“அதிமுக - தவெக கூட்டணியை உருவாக்கி திமுகவை வீழ்த்த பாஜக முயற்சி” - வேல்முருகன்

தருமபுரி: நடிகர் விஜய்யை மிரட்டி அதிமுக கூட்டணியில் இணைத்து திமுக-வை வீழ்த்த பிரதமர் மோடியும், அமித்ஷாவும் முயற்சி மேற்கொள்வதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தருமபுரியில் தெரிவித்தார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தருமபுரியில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 14 வயது சிறுவன் இந்த செயலை செய்ததாக மாவட்ட ஆட்சியர் கூறுகிறார்.

புதுக்கோட்டையை போலவே மீண்டும் ஒரு சம்பவம். அதேபோல, அம்பேத்கர், பெரியார், எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவதையும், அவமானப்படுத்துவதையும் ஏற்க முடியாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து, ஜாமீனில் வெளிவரமுடியாதபடி சிறையில் அடைக்க வேண்டும்.

தனது அரசை சமூக நீதி அரசு எனக் கூறிவரும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும். மத்திய அரசு கணக்கெடுப்புக்காக காத்திருக்கக் கூடாது. உயிர்த் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தாரை அவரவர் வீடுகளுக்கே நேரில் சென்று சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறினால் அது வரவேற்கக் கூடியது தான்.

அரசியல் என்பது மக்களுக்கானது. எனவே, மக்களோடு மக்களாக இருந்து பணி செய்ய வேண்டும். மக்களுக்கான முக்கிய பிரச்சினைகளை விஜய் கையில் எடுத்து போராட முன்வந்தால் அவருடன் இணைந்து நாங்களும் போராட தயாராக இருக்கிறோம். கரூர் சம்பவத்தில் குற்றம் இழைத்தவர்கள் யாராகிலும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். விஜய்யுடன் திமுக இணக்கமாக இருக்கிறதா என்று திருமாவளவன் எழுப்பிய கேள்வியில் உண்மையும், நியாயமும் இருப்பதாக நான் கருதுகிறேன்.

விஜய்க்கு மத்திய அரசு துணை ராணுவ பாதுகாப்பு வழங்குகிறது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் விஜய்யை மிரட்டி அதிமுக-தவெக கூட்டணி அமைத்து தமிழகத்தில் திமுக-வை வீழ்த்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் பேரிடர்கள் ஏற்பட்டபோது வராத பாஜக எம்.பி-க்கள் கரூர் சம்பவத்துக்காக ஓடி வருகிறார்கள்.

இந்நிலையில், விஜய் தன் கொள்கையில் உறுதியாக நிற்பாரா? சுய நலமாக முடிவெடுப்பாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியின்போது, கட்சியின் மாநில துணைப் பொது செயலாளர் தவமணி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x