Published : 10 Oct 2025 08:25 AM
Last Updated : 10 Oct 2025 08:25 AM
சென்னை: ‘அனுமதி பெற்றுத்தான் கரூர் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லை. கரூர் பாதுகாப்பான ஊர். விஜய் தைரியமாக வரலாம்’ என அண்ணாமலை தெரிவித்தார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தாயார் மறைவையொட்டி, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அஞ்சலி செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் எல்லோருக்கும் எந்த இடத்துக்கு செல்லவும் உரிமை உண்டு. என்னைப் பொறுத்தவரை கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க டிஜிபி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்க வேண்டிய அவசியம் தமிழகத்தில் இல்லை. இந்தியாவில் இருக்கக்கூடிய சில பகுதிகளைப் போல, அனுமதி பெற்றுதான் கரூர் செல்ல வேண்டும் என்ற நிலை இங்கு கிடையாது.
எனவே, விஜய் தைரியமாக கரூர் செல்லலாம். விஜய்யின் பாதுகாப்பை அவர்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நானும் கரூரைச் சார்ந்தவன்தான். எங்க ஊருக்கு வருவதற்கு அனுமதி எதற்கு? கரூருக்கு வருவது கடினம் என்றால், எங்க ஊரில் பூதாகரமான மக்களா இருக்கிறார்கள்? அதனால், விஜய் எங்கள் ஊருக்கு வர நினைத்தால் வரலாம். யாரை பார்க்க வேண்டுமோ வந்து பார்த்துவிட்டு செல்லட்டும்.
கரூருக்கு செல்வதே ஒரு அச்சுறுத்தல் என்பது போன்ற பிம்பத்தை நாம் ஏற்படுத்த வேண்டாம். இது நமது தமிழகத்தை நாமே தாழ்த்தி கீழே இறக்குவதுபோல ஆகிவிடும். கரூருக்கு விஜய் சென்றால் அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது குறித்து கேட்கிறீர்கள். நயினார் நாகேந்திரன் பேசியதை நான் கவனிக்கவில்லை. கரூர் பாதுகாப்பான ஊர்.
திருமாவளவனுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்குவது மக்களை அடிப்பதற்காகவா? திருமாவளவன் ஒரு மூத்த தலைவர். சமீபத்தில் அவரது தொண்டர்கள் நடந்து கொண்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா? இதில் அதிர்ச்சி என்னவென்றால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்கியதற்காக, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற இடத்தில், இவர்களே இன்னொருவரை தாக்கினால் எப்படி? ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை ஏன் பள்ளிக்குள் நடத்துகிறார்கள்? அரசியல் லாபத்துக்காக பள்ளிக்கூடத்தைப் பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
கோவையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜி.டி.நாயுடு சாதிகளைத் தாண்டி பொது தலைவர். அவரது பெயரை பாலத்துக்கு சூட்டியது சரிதான். தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாதிப் பெயர்களுக்கு மாற்று பெயர்களை வைக்க உத்தரவிட்ட அரசாணையில் கருணாநிதி பெயர் இருக்கிறது. ஆனால், எம்ஜிஆர் பெயர் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT