Published : 10 Oct 2025 07:22 AM
Last Updated : 10 Oct 2025 07:22 AM

“கூட்டம் வெற்றி தராது... கூட்டணிதான் வெற்றி தரும்!” - தேர்தல் களத்தை அலசும் ஜான் பாண்டியன் நேர்காணல்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன்

தேர்தல் வந்துவிட்டால் மற்ற கட்சிகளால் தேடப்படும் நபராகிவிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியனை 'இந்து தமிழ் திசை' பேட்டிக்காக தொடர்பு கொண்டோம். "நான் மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டேன்... சரி என்று பட்டதை தடாலடியாகச் சொல்லி விடுவேன். அதனால் நான் பேசியதில் தேவையில்லாததை வெளியிட்டு சர்ச்சையாக்கி விடாதீர்கள்” என்ற நிபந்தனையுடன் பேச ஆரம்பித்தார்.

திமுக ஆட்சியில் சாதிய மோதல்கள் கட்டுக்குள் உள்ளதா... சட்டம் -ஒழுங்கு எப்படி இருக்கிறது?

எண்ணூற்றுக்கும் மேற்பட்ட சாதிய மோதல்கள் நடந்ததாக பதிவுகள் உள்ளன. எனவே, தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்த அக்கறை செலுத்தவில்லை என்பது தெளிவாகிறது. காவல்துறை அதிகாரிகள் பலரும் சாதி வெறியோடுதான் செயல்படுகிறார்கள். அவர்கள் திருந்தினால் நான் சட்டம் -ஒழுங்கு சீராகும்.

என்டிஏ கூட்டணியில் தமமுக இப்போதும் 4 தொடர்கிறதா?

இப்போது வரை என்டிஏ கூட்டணியில் தான் உள்ளோம். எங்கள் கூட்டணியின் தலைவர் இபிஎஸ் தான். ஆனாலும், தேர்தல் அறிவித்த பிறகு, கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி, யாருடன் கூட்டணி என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும்.

4 தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு அங்கீகாரம் வழங்கிய பாஜகவுக்கு நன்றி தெரிவித்த நீங்கள், அவர்களோடு சேர்ந்து பயணிப்பது தானே சரியாக இருக்கும்?

எங்கள் சமுதாய மக்களுக்கு, யார் உதவி செய்தாலும் நன்றி சொல்வோம். இப்போது, தியாகி இமானுவேல் சேகரனுக்கு சிலை வைப்பதாக திமுக அரசு அறிவித்துள்ளது. அதற்கும் நன்றி சொல்லத்தானே வேண்டும்.

இபிஎஸ் தந்த நிர்பந்தம் காரணமாகவே உங்களின் திண்டுக்கல் மாநாட்டுக்கு ஒபிஎஸ், டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்கிறார்களே..?

மாநாட்டிற்கு அவர்களை அழைக்கக் கூடாது என்று இபிஎஸ் சொல்லவில்லை. மேலும், எங்கள் மாநாட்டிற்கு யாரைக் கூப்பிடலாம், யாரைக் கூப்பிடக் கூடாது என யாரும் கட்டாயப்படுத்தி ஆர்டர் போட முடியாது. அப்படி போட்டால் அதை கேட்பவன் நானல்ல. டிடிவி தினகரன் எனது நண்பர். தவறுதலாக அவரை அழைக்காமல் விட்டுவிட்டோம்.

இந்தத் தேர்தலில் தவெக தான் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி என்கிறார்களே..?

பத்திரிகையும், மீடியாவும் தான் இப்படி சொல்கிறார்கள். கரூரில் 41 பேர் இறந்த சம்பவத்தில், அவர்களின் குடும்பத்தைப் பார்க்கவே பயந்து ஓடுகிறார்கள். இவர்கள் எப்படி அரசியல் நடத்துவார்கள்? இறந்தவர்களின் வீட்டுக்கு நேரில் போகாமல், வீடியோ அழைப்பில் யாராவது ஆறுதல் சொல்வார் களா... இவர்கள் எல்லாம் விளம்பரப் பிரியர்கள், கதைக்கு ஆக மாட்டார்கள்.

ஆனால், விஜய்க்கு பெரும் கூட்டம் கூடுகிறது. தென் மாவட்டங்களில் தவெக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்கிறார்களே?

கோயில், மார்க்கெட் என எல்லா இடத்திலும் தான் கூட்டம் கூடும். பஜாரில் ஒருவனை வெட்டினால், அதனை வேடிக்கை பார்க்கவும் தான் கூட்டம் கூடும், எனவே, கூட்டத்தை வைத்து எல்லாம் முடிவெடுக்காதீர்கள்; கூட்டணியை வைத்து முடிவெடுங்கள். தேர்தலில் கூட்டம் வெற்றி தராது; கூட்டணி தான் வெற்றி தரும்.

என்டிஏ கூட்டணியில் தவெகவும் இணைய வேண்டும் என அதிமுக, பாஜகவினர் விரும்புகின்றனரே?

இதில் தவறு இல்லையே. அது அவர்களது விருப்பம். கூட்டணி பலம் பெற யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம்.

சமீபத்திய பேட்டியில், "நான் இந்தி படித்திருந்தால் இந்தியாவில் நம்பர் ஒன் ஆக மாறி இருப்பேன்" என்று சொல்லி இருந்தீர்களே... இந்தி மேல் அவ்வளவு பற்றா?

டெல்லி சென்று அமைச்சர்கள், அதிகாரிகளைப் பார்க்கும்போது, இந்தி தெரிந்த ஒருவரை கூட்டிச் செல்ல வேண்டியுள்ளது. அங்கிருப்பவர்கள் இந்தியில் பேசுவதைத் தான் விரும்புகின்றனர். அறியா பருவத்தில், 'இந்தி ஒழிக' என கல்வீசி போராட்டத்தில் ஈடுபட்டேன். இப்போது அதன் அவசியம் அறிந்து வருத்தப்படுகிறேன். இந்தி படிக்காமல் தவறு செய்துவிட்டோம் என உணர்கிறேன்.

கரூர் சம்பவம் குறித்து விசாரிக்கும் ஒரு நபர் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்லியிருக்கிறீர்களே..?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இதே ஆணையம் விசாரித்தது. அந்த விசாரணையில், நீதியை நிலைநாட்டி, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த ஆணையத்தின் மீதும் நம்பிக்கை வந்திருக்கும்.

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க வேண்டும் என்று இபிஎஸ் பேசியதற்கு நீங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தீர்களே..?

யாரோ எழுதிக் கொடுத்ததை அவர் வாசித்துவிட்டார். மதுரை விமான நிலையம் அமைவதற்கு இடம் வழங்கியவர்கள் தேவேந்திர குல வேளாளர்கள். எனவே, தங்கள் சமுதாய தலைவர் பெயரை வைக்க அவர்கள் உரிமை கோருகின்றனர். தேவையில்லாத இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க, விமான நிலையத்திற்கு மதுரை மீனாட்சி பெயரை சூட்டிவிடலாம்.

உங்களின் கூட்டணிக் கட்சி தலைவரான இபிஎஸ் கருத்தையே எதிர்க்கிறீர்களே..?

எல்லாவற்றிற்கும் ஜால்ரா போடுபவன் ஜான் பாண்டியன் அல்ல. எது தவறோ, அதை சுட்டிக்காட்டுவது தான் எங்களது அரசியல்.

பொது இடங்களில் சாதி பெயரை நீக்க வேண்டும் என அரசாணை பிறப்பித்த தமிழக அரசு, கோவையில் புதிய பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயர் சூட்டியுள்ளது சர்ச்சையாகி உள்ளதே..?

இது வேடிக்கையாக உள்ளது. தெரு பெயர். ஊர் பெயரில் சாதி இருந்தால் உடனே நீக்கச் சொல்லி அரசாணை வெளியிடுகிறார்கள். அதே அரசு, ஜி.டி.நாயுடு என்று பாலத்துக்கு பெயர் சூட்டுகிறது. இதற்கு முதலமைச்சர் தான் பதில் சொல்ல வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x