Published : 08 Aug 2018 03:14 PM
Last Updated : 08 Aug 2018 03:14 PM
ராஜாஜி ஹால் உள்ளே வர தொண்டர்கள் முயற்சிக்க வேண்டாம், கலைந்து செல்ல வேண்டும் என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அவருடைய இறுதிச்சடங்கு மாலை 4 மணிக்கு நடைபெறும் என திமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
அதில், “மாலை 4 மணியளவில் இறுதி ஊர்வலம் ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டு, சிவானந்தா சாலை வழியாக, பெரியார் சிலையை கடந்து அண்ணா சிலை வந்தடைந்து அங்கிருந்து வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படும். திமுக தொண்டர்களும், பொதுமக்களும் இறுதி ஊர்வலத்தில் அமைதிகாத்து கருணாநிதிக்கு இறுதி வணக்கம் செலுத்தலாம்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே அங்கு சற்று அசாதாரண சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒலிபெருக்கியில் தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, “ஆட்சியில் இருப்பவர்கள் குழப்பம் விளைவிக்க நினைத்தனர். ஆனால், தொண்டர்களின் பலத்தை நீங்கள் காட்டி விட்டீர்கள். திமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். இட ஒதுக்கீட்டிற்காக போராடிய திமுக தலைவர் கருணாநிதிக்கு மறைந்த பிறகும் இடஒதுக்கீட்டில் வெற்றி கிடைத்துள்ளது.
எப்போது தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்ததோ அப்போதே அவர்கள் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டிருக்கின்றனர். அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் அனைவரும் கலைந்து செல்லுங்கள். யாரும் படியேறி மேலே வர முயற்சிக்க வேண்டாம். திமுக தலைவரால் உருவாக்கப்பட்ட நான், உங்களில் ஒருவனாக கேட்கிறேன்” என ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT