Published : 10 Oct 2025 06:17 AM
Last Updated : 10 Oct 2025 06:17 AM
கும்பகோணம்: ஆடுதுறை அரசுப் பள்ளியில் தடுப்புச் சுவர் இல்லாமல் கழிப்பறை கட்டிய விவகாரத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகேயுள்ள ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.34 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதை கடந்த 6-ம் தேதி பேரூராட்சித் தலைவர் ம.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஆனால், அந்தக் கழிப்பறையில் தடுப்புகள் அமைக்கப்படாததால், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சுகாதார வளாகத்தில் தடுப்புச் சுவர் கட்ட வேண்டுமென உயரதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், திருச்சி மண்டல செயற் பொறியாளர் சுப்பிரமணியன், தஞ்சாவூர் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மாகீர் அபூபக்கர் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு முதல் அங்கு முகாமிட்டு, தடுப்புச் சுவர் கட்டும் பணிகளை மேற்கொண்டனர். இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக ஆடுதுறை பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன், இளநிலைப் பொறியாளர் ரமேஷ் ஆகியோர் நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT