Last Updated : 09 Oct, 2025 08:48 PM

3  

Published : 09 Oct 2025 08:48 PM
Last Updated : 09 Oct 2025 08:48 PM

“அதிமுக ஆட்சி அமைந்ததும் கிட்னி முறைகேடு மீது நடவடிக்கை” - நாமக்கல்லில் பழனிசாமி உறுதி

நாமக்கல்: “அதிமுக ஆட்சி அமைந்துவுடன் கிட்னி முறைகேடு முழுமையாக விசாரிக்கப்பட்டு, யாரெல்லாம் இதில் ஈடுபட்டார்களோ அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நாமக்கல்லில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எனும் பெயரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது: ”திமுக ஆட்சியில் குடிக்கும் நீரில் மலம் கலக்கப்படுகிறது. இந்த ஆட்சி வந்தபோது வேங்கைவயல் சம்பவத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முடியவில்லை. இது கைலாகாத அரசாங்கம். திறமையற்ற பொம்மை முதல்வர் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்.

வேங்கைவயல் பிரச்சினை தீர்வதற்குள் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் வடுகப்பட்டி என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி திறக்கப்பட்டபோது அங்கு மலம் கலந்த நீர் இருந்துள்ளது. இப்படிப்பட்ட சம்பவம் திமுக ஆட்சியில் தொடர்ந்து நடக்கிறது. இவற்றை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு முதல்வருக்கு திறமையில்லை.

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. நெல்லை மாவட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டார். இதுவரை குற்றவாளி கண்டுபிடிக்கவில்லை. சென்னையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் காவல் துறையினர் பார்த்து பயந்த நிலை மாறிவிட்டது. இதற்கு முடிவு கட்டும் தேர்தல் 2026 சட்டப்பேரவை தேர்தல்.

திமுக ஆட்சி அமைந்த ஓரே ஆண்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. தமிழகம் இந்தியாவில் போதைப்பொருள் அதிகம் உள்ள மாநிலமாக விளங்குகிறது. கரூரில் காவல் துறை பாதுகாப்பு கொடுத்திருந்தால் 41 உயிர் காப்பற்றப்பட்டிருக்கும். இந்த சம்பவம் நடந்த பிறகு தான் காவல் துறையினர் ஓரளவு பாதுகாப்பு கொடுக்கின்றனர்.

எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்திற்கு முழுமையாக பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமையாகும். எதிர்க்கட்சிகளின் போராட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட அனைத்திற்கும் அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. ஆளுங்கட்சி திமுக பொதுக்கூட்டம் நடத்த எந்த இடம் கேட்டாலும் காவல் துறையினர் அனுமதி தருகின்றனர். அதிமுக கேட்டால் அனுமதி கொடுப்பதில்லை.

நீதிமன்றம் சென்று அனுமதி பெறும் நிலை உள்ளது. திமுகவின் ஆயுட் காலம் 7 மாதம் தான் உள்ளது. அதன்பின் அதிமுக ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் காஞ்சிபுரம் அருகில் இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. அது தமிழக அரசுக்கு தெரியவில்லை. அந்த நிறுவன தயாரிப்பு மருந்தை குடித்த மத்திய பிரேதசத்தில் 20 குழந்தைகள் உயிரிழந்துவிட்டனர்.

இந்த நிறுவனம் பற்றி சுகாதாரத் துறைக்கு தெரியவில்லை. மத்திய பிரதேச அமைச்சர் தமிழக அரசு சுகாதாரத் துறை அலட்சியத்தால் உயிர்கள் இறந்ததாக கூறியுள்ளார். அம்மாநில போலீஸார் காஞ்சிபுரம் வந்து மருந்து நிறுவன உரிமையாளரை கைது செய்து சென்றது. அதன்பிறகு தான் இந்த விஷயமே அரசுக்கு தெரியவந்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் வரி வருவாயில் மட்டும் ரூ.200 கோடி ஊழல் செய்துள்ளனர். ஆனால் மேயர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அங்கு மட்டுமில்லை. திண்டுக்கல்லில் ரூ.4.50 கோடி ஊழல் செய்துள்ளனர். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் எந்தந்த மாநகராட்சியில் ஊழல் நடைபெற்றதோ அது குறித்து முழுமையாக, விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயம், விசைத்தறி, லாரி, கோழிப்பண்ணை உள்ளிட்ட 4 தொழில்களும் திமுக ஆட்சி அமைந்தவுடன் படு பாதாளத்திற்கு சென்றுவிட்டது. விசைத்தறி தொழிலாளர்களின் பணத்தாசை காட்டி கிட்னி எடுத்துள்ளனர். திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

பள்ளிபாளையத்தில் பெண்ணுக்கு பணத்தாசை காட்டி கிட்னிக்கு பதில் கல்லீரலை எடுத்துவிட்டனர். அதிமுக ஆட்சி அமைந்துவுடன் இந்த கிட்னி முறைகேடு முழுமையாக விசாரிக்கப்பட்டு யாரெல்லாம் இதில் ஈடுபட்டார்களோ அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முன்னதாக, நாமக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் விவசாயிகள், லாரி உரிமையாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேற்குறிப்பிட்டோர் குறித்து தெரிவித்த கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.

தொடர்ந்து பரமத்தி வேலூர் அருகே பாண்டமங்கலத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, சரோஜா, விஜயபாஸ்கர், பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x