Published : 09 Oct 2025 06:37 PM
Last Updated : 09 Oct 2025 06:37 PM
புதுச்சேரி: "எங்களுடைய எண்ணம் எல்லாம் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு எல்லோரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதுதான். நிர்வாகத்தில் சில நேரங்களில் கேள்விகள் கேட்கப்பட்டு, கோப்புகள் திரும்ப அனுப்புவதும் உண்டு. நாங்கள் கோரும் தனி மாநில அந்தஸ்து கோரிக்கை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்" என ஆளுநர் உடனான மோதல் குறித்த கேள்விக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பதிலளித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “எங்கள் ஆட்சியில் கட்சி பாகுபாடு இல்லாமல் புதுச்சேரி மாநிலம் முன்னேற வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். அதனடிப்படையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எதையும் பார்க்காமல் எல்லோருக்கும் நிதி பகிர்ந்தளிக்கப்பட்டு உள்கட்டமைப்பு பணிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.
அப்போது கூட்டணி கட்சியான பாஜக எம்எல்ஏ சாய் ஜெ சரவணன்குமார், 'எங்கள் தொகுதியில் எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை' என்று கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் ரங்கசாமி, “எல்லா தொகுதிகளுக்கும் நிதி வழங்கப்படுகிறது. இப்போது கூட ரூ.200 கோடி மத்திய அரசு நிதி கொடுத்துள்ளது. அதனை மார்ச் மாதத்துக்குள் செலவு செய்ய வேண்டும். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகி உள்ளார். அமைச்சரவையில் தான் இருந்துள்ளார். என்னென்ன பணிகள் நடைபெற்றுள்ளது என்பதை கேட்டுப்பாருங்கள்” எனக் கூறினார்.
'அமைச்சர் பதவி இல்லாத விரக்கியில் பேசுகிறாரா' என தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு முதல்வர், “இப்போதுதான் அவர் தனது தொகுதிக்கு சென்று பார்க்கின்றார். அதனை பார்த்தாலே தெரியும்” என பதில் கூறினார்.
தொடர்ந்து பட்டியலினத்தவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து முக்கியத்துவம் தர வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது என்பது குறித்து கேட்டபோது, “பட்டியலினத்தவர்களுக்கு இரண்டு அமைச்சர் பதவி கொடுத்த ஒரே ஆட்சி தான் நம்முடைய ஆட்சி. முன்பும், இப்போதும் அமைச்சர் பதவி கொடுத்திருக்கின்றேன். வேளாண்துறை, கல்வித்துறை இயக்குநர்களை நியமிப்பதற்கான கோப்பு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பியுள்ளேன். அது விரைவில் வந்துவிடும்” என்றார்.
துணைநிலை ஆளுநருக்கும், உங்களுக்கும் சுமுகமான உறவு உள்ளதா? மோதல் போக்கு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டபோது, “எங்களுடைய எண்ணம் எல்லாம் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு எல்லோரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதுதான். நிர்வாகத்தில் சில நேரங்களில் கேள்விகள் கேட்டு கோப்புகள் திரும்ப அனுப்புவது என்பது உண்டு. தடங்கள் இல்லாமல் விரைவாக பணிகள் நடைபெற வேண்டும் என்பது தான் எங்களின் மிக முக்கயமான நோக்கம்.
நாங்கள் கோரும் தனி மாநில அந்தஸ்து கோரிக்கை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதனை நாங்கள் கேட்டுக்கொண்டே இருப்போம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் உள்ளவர்களுக்கு அந்த அதிகாரம் தேவை. ஆகவே அதனை வலியுறுத்தி எப்போதும் கேட்போம்” என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT